விமானப் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் தனது சிறு வயது கனவாக இருந்தது என்கிறார் இளம் நாயகி அனிகா சுரேந்திரன்.
சினிமாவுக்கு வந்ததால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போனது என்ற ஏக்கத்துடன் சொல்கிறார்.
முன்பெல்லாம் சமூக ஊடகங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்துகொண்டிருந்தார் அனிகா. அவற்றில் சில படங்களைப் பார்த்த வயதில் மூத்த ரசிகர்கள், இவ்வளவு கவர்ச்சி தேவையா என்று கேட்பதால் மனம் மாறிவிட்டாராம்.
அண்மைக் காலமாக அனிகா வெளியிடும் சமூக ஊடகப் படங்களில் அவர் புடவையுடன் இருக்கும் படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன.
கவர்ச்சி வேண்டாம் என்று அறிவுரை கூறியவர்களில் முதன்மையானவர் நடிகர் அஜித் என்பதுதான் மிக முக்கியமான தகவல்.
திடீரென ஒரு நாள் அனிகா அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, இந்த அறிவுரையைக் கூறினாராம்.
“அந்தக் காலத்தில் ராதா, ராதிகா போன்ற சிலர்தான் 18 வயதை எட்டாத மைனராக இருக்கும்போதே கதாநாயகியாக நடித்தனர். ஆனால், இந்தக் காலத்தில் 17 வயதிலேயே நாயகியாக அறிமுகமாகிறார்கள். அவர்களில் அனிகாவும் ஒருவர்.
“அனைத்து மாநிலங்களில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. நாயகியாக மட்டும் ஐந்து படங்களில் நடிக்கிறார். அதேசமயம் நல்ல கதாபாத்திரங்களாக தேடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த அளவில் அனிகாவைப் பாராட்டலாம்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
அனிகாவை இன்ஸ்டகிராமில் மட்டும் மூன்று மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அந்த தரப்பில் மட்டும் அவர் பகிரும் புகைப்படங்கள் தனித்துவமான படங்களாக உள்ளன. அதனால் அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களைக் காண ரசிகர்கள் அவரது இன்ஸ்டா கணக்கை மொய்க்கிறார்கள். இதனால் வரக்கூடிய தொகை மட்டுமே ஒரு படத்தில் நடிப்பதற்குச் சமமாக உள்ளதாம்.
சில நாள்களுக்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காணொளியையும் அனிகா பகிர, அவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக வர்ணித்துப் பாராட்டி உள்ளனர்.
“சிறு வயதிலேயே விமானப் பணிப்பெண்ணாக வேலையில் சேர வேண்டும் என்று அனிகா சொல்லிக்கொண்டே இருப்பார். அந்தக் கனவு நிறைவேறவில்லை என்ற ஏக்கம் இன்னும் அவரிடம் உள்ளது.
“பட வாய்ப்புகள் குறையும்போது மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் அனிகாவுக்கு மட்டுமல்ல, பெற்றோர் என்ற வகையில் எங்களுக்கும் உண்டு. அவர் கல்வியைத் தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் அனிகாவின் தாயார்.
அஜித்துடன் நடித்ததுதான் தனக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது என்று கூறும் அனிகா, மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.
இப்போதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அஜித்தை தொடர்புகொள்கிறாராம்.
எப்போதுமே அவரை ‘அப்பா’ என்றுதான் பாசத்துடன் குறிப்பிடுவதாகவும் அஜித்தும் தன்னை தன் மகள் அனோஷ்கா போன்று மற்றொரு மகளாகப் பார்ப்பதாகவும் சொல்கிறார் அனிகா.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இந்திரா’ ஆகிய படங்களில் நடித்துள்ள அனிகா, இனி தன் திறமைக்கேற்ற படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.
அநேகமாக, தனுஷ் மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்குவார் எனக் கூறப்படுகிறது.