தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தனது தாயார் இறந்துவிட்டதாக நடிகை ஹேமா கொல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியைப் பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
“என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக சில தகவல்களும் வதந்திகளும் வெளிவந்தன. இது என் அம்மாவின் உடல்நிலையைக் கடுமையாகப் பாதித்தது.
“எனக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால், எந்தத் தவறும் செய்யவில்லை என்று நான் கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை.
“என் அம்மா இப்போது உயிருடன் இல்லை. போலிச் செய்திகளைப் பரப்பியவர்களால் அவரை இப்போது திருப்பிக்கொடுக்க முடியுமா?” என்று தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் ஒருசேர அந்தக் காணொளியில் பதிவு செய்துள்ளார் நடிகை ஹேமா கொல்லா.
இவர் சில காலத்துக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட ஒரு கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த வழக்கு அண்மையில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

