தீவிர, நீண்டகால தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அந்தக்கால நடிகை பபிதாவைத் தெரிந்திருக்கும். அவரது மகள் ஹரிஷா ஜஸ்டினும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
பலமான சினிமா பின்னணி இருந்தும், எதுவும் தனக்குத் தேவையில்லை, திறமை மட்டுமே போதும் என்ற முடிவோடு களம் இறங்கியுள்ள இந்த இளம் வாரிசு நடிகை, ‘கம்ப்யூட்டர் சைன்ஸ்’ பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
“அம்மா பபிதா நல்ல நடிகை என்பது எல்லாருக்கும் தெரியும். அப்பா ஜூடோ ரமேஷ் (சண்டைப் பயிற்சியாளர்), தாத்தா ஜஸ்டீன் (எம்ஜிஆர் காலத்து) நடிகர்.
“நடிகை சாவித்திரி அவர்கள் சொல்லப் போனால், என் குடும்பத்தில் எல்லாருமே ஒரு வகையில் சினிமா ஆள்கள்தான். நான் நினைத்திருந்தால் எளிதில் வாய்ப்பு பெற்றிருக்க முடியும். ஆனால் சினிமை பின்னணியை வைத்து குடும்பத்தார் மூலம் வாய்ப்பு பெறுவதில் விருப்பம் இல்லை.
“நான் முன்னறிமுகமின்றி வாய்ப்புகளைத் தேடினேன். அதனால் நான் எதிர்பார்த்த வாய்ப்பு எளிதில் அமையவில்லை,” என்று சொல்லும் ஹரிஷா, ‘சூதுகவ்வும்-2’ படத்தில் அறிமுகமானவர். அதற்கு முன்பு நிறைய ‘மாடலிங்’ நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்த அனுபவம் உண்டாம். இடையிடையே சில திரைப்படங்களுக்கான நடிப்புத் தேர்விலும் பங்கேற்றுள்ளார்.
“ஆனால், எந்த இடத்திலும் எனது சினிமா பின்னணி குறித்துச் சொன்னதில்லை. ‘சூதுகவ்வும்-2’ படத்திலும் நடிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுத்தான் நடித்தேன்.
“அம்மா பல நல்ல விஷயங்களைக் கூறியுள்ளார். சொல்லிக் கொடுத்தும் உள்ளார். தன் திறமையை வெளிப்படுத்த சிறு வாய்ப்பு கிடைத்தாலும், அதை விட்டுவிடக்கூடாது என்று அடிக்கடி சொல்வார். அதனால்தான் ‘நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்தபோது, தயங்காமல் ஏற்றுக்கொண்டாராம்,” என்கிறார் ஹரிஷா.
தொடர்புடைய செய்திகள்
இவருக்கு நடிப்புத்தவிர ஓவியத்திலும் ஆர்வம் உண்டு. குறிப்பாக ’பிட்ச்வேய்’ ஓவியங்களில் ஆர்வம் அதிகமாம். மேலும் சமையல் கலையிலும் கைதேர்ந்தவர். அவ்வப்போது நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு தன் கையால் சமைத்து விருந்து வைத்து அசத்துகிறார்.
தற்போது ‘டிரீம் கேர்ல்’ படத்தில் நடித்துள்ளார் ஹரிஷா. இதில் இவருக்குப் பாடகி வேடமாம்.
“குளியலறைப் பாடகர் என்று பலரைக் குறிப்பிடுவோம். ஆனால் நானோ அந்த வகையில்கூட சேர்த்தியில்லை. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் தடுமாறினேன். அப்போது இயக்குநர்தான் கவலைப்பட வேண்டாம் என்று தைரியமூட்டினார்.
“பாடகி போல் துணிச்சலுடன் பாடி நடியுங்கள், ‘டப்பிங்’ சமயத்தில் அனைத்தையும் சமாளித்துவிடலாம் என்று அவர் சொன்னதும்தான் எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.
“ஒளிப்பதிவாளர் சாலமன்தான் நல்ல கதாபாத்திரம் என்று சொல்லி என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் கதாநாயகன் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற புத்தகத்தைப் படிப்பார். அது ஒரு கற்பனைக் காட்சி. அந்தப் புத்தகம் ரஷ்யாவின் புகழ்பெற்ற காதல் புதினம் என இயக்குநர் எம்ஆர் பாரதி என்னிடம் கூறினார்.
“வெறும் இரண்டு அல்லது மூன்று நொடிகளில் கடந்துபோகும் ஒரு விஷயத்துக்காக இந்த அளவுக்கு யோசிக்கிறார்களே என்று நினைத்து வியந்து போனேன்,” என்று சொல்லும் ஹரிஷாவுக்குப் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயனாம்.
நடிகைகளில் முன்பு நயன்தாராவையும் இப்போது ராஷ்மிகாவையும் ரசிப்பதாகச் சொல்கிறார்.
“மூவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கு,” என்கிறார் ஹரிஷா.

