திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, கடந்த 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி மருத்துவம் பார்த்து வந்த செல்லமுத்து, அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
தாசவநாயக்கன்பட்டியில் ‘கை ராசியான மருத்துவர்’ எனப் புகழ்பெற்றிருந்த செல்லமுத்துவின் மருந்தகத்தில் சிகிச்சை பெற்று உடல்நிலை மோசமான ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த விசாரணையில், அதிக சக்தி உள்ள மாத்திரைகள் கொடுத்ததால் அவரது குடலில் காயம் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
“செல்லமுத்து 10ஆம் வகுப்பு கூட ஒழுங்காகப் படிக்கவில்லை. அதை நான் சொன்னால் யாரும் காதில் வாங்குவதில்லை,” என அவர் பள்ளி நண்பர் கூறியதைக் கேட்டு புகார் அளிக்கப்பட்டது.
மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் எஸ்.மீரா உத்தரவின் பேரில், டாக்டர் சந்திரசேகர், டாக்டர் ராஜலட்சுமி அடங்கிய குழுவினர் செல்லமுத்துவின் மருந்தகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
உடலில் எந்தப் பாதிப்பும் இல்லாத ஒரு நபரை நோயாளியாக அனுப்பி வைத்தனர்.
அப்போது, அந்த நபருக்கு சம்பந்தமே இல்லாத மருந்தை ஊசி போட செல்லமுத்து முயன்றபோது, மருத்துவக் குழுவினர் அவரை மடக்கிப் பிடித்தனர்!
விசாரணையில், அவர் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும் இளம் வயதில் ஒரு தனியார் மருத்துவரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, அதன் பிறகு 40 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் அம்பலமானது.
தொடர்புடைய செய்திகள்
போலி மருந்தகத்தை மூடிய அதிகாரிகள் செல்லமுத்துவைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவப் படிப்பே முடிக்காமல் பல ஆண்டுகளாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் அடுத்தடுத்து சிக்குவது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

