‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன், தவுதி எஸ். ஜிவால் நடிப்பில் உருவான அரசியல் சார்ந்த திரைப்படம் ‘கராத்தே பாபு’.
தொடக்கம் முதலே பெரும் எதிர்பார்ப்பைத் தந்த இப்படம், தற்போது தணிக்கைக்குழுவின் சான்றிதழ் பெறுவதில் சிக்கலைச் சந்தித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு, ஜனவரி மாதம் வெளியானது. அதில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த காட்சிகள் பல விவாதங்களை எழுப்பின.
இந்நிலையில் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகாமல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு தணிக்கைக் குழுவின் பார்வைக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். ஆனால், படத்தைப் பார்த்த அக்குழுவினர், நிகழ் காலத்தில் உள்ள சில முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களைக் குறிப்பிடும் வகையிலும் அவர்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சில காட்சிகள் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு, ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இத்திரைப்படம் தற்போது மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்குழுவின் பார்வைக்குப் பிறகே படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அதன் பின்னரே வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் இதேபோன்று தணிக்கைச் சிக்கலில் சிக்கி, ஐந்து மாத தாமதத்துக்குப் பிறகு திரைகண்டது.
‘கராத்தே பாபு’ திரைப்படமும் அதேபோன்ற சூழலைச் சந்தித்துள்ளதால், படம் குறித்த நேரத்தில் வெளியாகுமா அல்லது மேலும் தாமதமாகுமா என்ற கவலையில் படக்குழுவினரும் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
