பெரிய படங்களுக்கு மத்தியில் சிறு படங்களும் அவ்வப்போது வெற்றி பெற்று வருகின்றன.
அந்த வரிசையில், ‘கார்மேனி செல்வம்’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமுத்திரக்கனி, கௌதம் மேனன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார்.
கணவன், மனைவி என ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ்க்கை நடத்திவரும் நிலையில், அதிகம் சம்பாதித்தால்தான் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கருதுகிறார் கணவர். இந்த எண்ணம் மனத்துக்குள் தோன்றிய பிறகு அவரது வாழ்க்கையோட்டத்தில் எத்தகைய அனுபவங்களைச் சந்திக்கிறார், எது உண்மையான செல்வம் என்பதை புரிந்துகொள்கிறார். இதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையை சமுத்திரக்கனியிடம் சொல்லச் சென்றபோது, ‘நிறைய படங்களை ஒப்புக்கொண்டுள்ளேன். எனவே, என்னால் நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். ஒருவேளை கதை பிடித்திருந்தால் நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கடைசியில் இயக்குநருக்குத்தான் வெற்றி. சொன்னபடியே நடிக்க முன்வந்தார் சமுத்திரக்கனி.
“கௌதம், கனி இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இருவரும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டால், ‘கௌதம் காட்சிகளை முதலில் எடுத்துவிடுங்கள்’ என்பார் கனி. அதேபோல் ‘முதலில் சமுத்திரக்கனி காட்சிகளைப் படமாக்குங்கள்’ என்பார் கௌதம்.
“சமுத்திரக்கனியின் நடிப்பு குறித்து கேட்கவே தேவையில்லை. ஒருமுறைகூட அவர் வசனத்தை மறந்ததே இல்லை.
தொடர்புடைய செய்திகள்
“கௌதம் மேனனைப் பொறுத்தவரை அவர் நின்றாலே ஒரு ஸ்டைல்தான். சிறிது நேரம் பேசினாலும்கூட அருகில் இருப்பவர்களைக் கவர்ந்துவிடுவார். தனக்கான வசனங்கள் இரண்டு இடங்களில் தவறாக வந்துவிட்டால் அவற்றை மிக எளிமையாக தானே மாற்றி அமைத்துக்கொள்வார்.
“இப்படத்தில் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, ‘நாடோடிகள்’ அபிநயா என இரண்டு நாயகிகள் உள்ளனர். இருவரில் லட்சுமி பிரியா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
“அபிநயா மிகத் திறமையான நடிகை. வாய் பேச முடியாவிட்டாலும் எதிரே நடிப்பவர்களின் உதட்டசைவைக் கவனித்து முகபாவங்களை வெளிப்படுத்துவார்,” என்கிறார் இயக்குநர் ராம் சக்ரி.