ஒரே சமயத்தில் தமிழ் சினிமாவின் நான்கு முன்னணி கதாநாயகர்கள் மலேசியாவில் முற்றுகையிட்டுயிருப்பது அந்நாட்டின் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யைப் பொறுத்தவரை, ‘ஜனநாயகன்’தான் தன் கடைசி படம் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்து களத்தில் தெளிவாகச் செயல்பட்டு வருகிறார்.
அவர் மீண்டும் நடிப்பார், தேர்தலில் தோல்வியுற்றால் திட்டத்தை மாற்றுவார் என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் பரவுகின்றன.
ஆனால், தேர்தல் முடியும் வரை எதையும் கணிப்பதற்கு இல்லை, நம்புவதற்கும் இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதனிடையே, அஜித்தின் மலேசியப் பயணம் திடீரெனத் திட்டமிட்டதல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என அவரது தரப்பில் கூறப்படுகிறது.
தன்னை நம்பி திரையுலகிலும் கார் பந்தய அரங்கிலும் பலர் பணியாற்றி வருவதை அஜித் அறிவார். எனவே, அவர்களுடைய நலனிலும் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தான் பெரும்பாலும் வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ப அனைத்தையும் திட்டமிட வேண்டிய நிலையில் உள்ளார்.
மலேசியக் கார் பந்தயம் முடிவுக்கு வந்த கையோடு ‘F 1’ என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கான கதையை இயக்குநர் விஷ்ணுவர்தன் உருவாக்கி வருகிறார். மேலும், இப்படம் தொடர்பாக அஜித்தின் விருப்பத்தின் பேரில் இரண்டு விளம்பரங்கள் உருவாக்கப்பட உள்ளன. அவற்றை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா உருவாக்க உள்ளார்.
மேலும், அஜித் கார் பந்தயங்களில் தொடர்ந்து ஈடுபடுவதைச் சித்திரிக்கும் வகையில் குறும்படம் ஒன்று தயாராகிறது. இதை இயக்குநர் ஏஎல் விஜய் உருவாக்கி வருகிறார். சிறு வயது முதல் அஜித் பத்தயத்துக்காக செலவிட்ட நேரம், உழைப்பு, அவர் சாதித்தது ஆகியவற்றையெல்லாம் எடுத்துக்கூறும் வகையில் இந்தக் குறும்படம் அமையுமாம்.
“அஜித் தன்னைச் சுற்றி இருப்பவர்களில் நலன்களிலும் அக்கறை மிகுந்தவர். அதனால்தான் விஷ்ணுவர்தன், ‘சிறுத்தை’ சிவா, ஏஎல் விஜய் என்று ஒரே சமயத்தில் மூன்று பேருக்கு வாய்ப்பளித்து தனது நல்ல மனத்தை வெளிப்படுத்தி உள்ளார்,” என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இருவரும் இணையும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த உள்ளனர். அதற்காக, தற்போது சிவகார்த்திகேயன் மலேசியாவுக்குச் சென்றுள்ளார். அவரும் வெங்கட்பிரபுவும் படப்படிப்பு நடக்கும் இடங்களைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கோலாலம்பூரில் உள்ள ஒரு நகைக் கடையைத் திறந்து வைப்பதற்காக அங்கு சென்ற சிம்பு, ஓரிரு நாள்களில் தமிழகம் திரும்பிவிடுவாராம். மதுரையில் நடைபெற உள்ள ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள அவர், அடுத்தகட்ட படப்பிடிப்புகளுக்காக மீண்டும் மலேசியா வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

