மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015ஆம் ஆண்டு கதாநாயகியாகத் தமது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா‘ மூலம் தமிழில் இவர் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘சத்ரு’, ‘தீபம்’, ‘துருவங்கள் 16’ போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ படத்தில் கெளதம் கார்த்திக்குடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், விகடன் வார இதழுக்கு அவர் நேர்காணல் ஒன்று அளித்திருந்தார். அதில், தமது உடல் பருமன் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் மஞ்சிமா.
‘ஒரு வடக்கன் செல்ஃபி’ எனும் மலையாளப் படத்தில் நாயகியாக அறிமுகமாகும்போதே நீங்கள் சற்று உடல் மெலிந்தால் நன்றாக இருக்கும் என அப்படக்குழு கூறியதாகக் கூறிய அவர், பலதரப்பினரிடமிருந்தும் அதற்கான ஆலோசனைகள் வந்ததாகச் சொன்னார்.
ஆரம்ப காலத்தில் அதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“திரையுலகம் என்னுடைய வாழ்க்கையின் ஓர் அங்கம். நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. உடல் எடையைக் குறைத்தால் நிறைய வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள்.
“நானும் முடிந்தவரை அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டேன். ஒருகட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் எனக் கூட எண்ணினேன்.
“எனக்கு ஹார்மோன் தொடர்புடைய பிரச்சினை உள்ளது. அதனால், உடல் பருமனாக உள்ளேன். உடல் எடையைவிடவும் அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதுதான் மிகவும் கடினமாக உள்ளது,” எனப் புன்னகையுடன் கூறினார் மஞ்சிமா மோகன்.
அந்தப் பிரச்சினையைத் தாண்டிதாம் மிகவும் உடல்நலத்துடன் உள்ளதாகவும் அதனால் உடல் எடையைப் பற்றி எப்போதும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.