காலஞ்சென்ற தமிழக முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1975ஆம் ஆண்டு வெளியான படம் ‘இதயக்கனி’.
தமிழில் வெற்றிபெற்ற பல படங்கள் மறுவெளியீடு காணும் இவ்வேளையில், ‘இதயக்கனி’ படத்தையும் மறுவெளியீடு செய்தனர்.
சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நாள்தோறும் ஒரு காட்சி என்ற அளவில் வெளியிடப்பட்டாலும், முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவு அசத்தலாக இருந்தது.
பிறகென்ன... தொடர்ந்து 150 நாள் ஓடி சாதனை படைத்துள்ளது ‘இதயக்கனி’.
இதையடுத்து நடத்தப்பட்ட வெற்றி விழாவில் சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் எம்ஜிஆர், எம்ஆர் ராதா, ராஜசுலோச்சனா, ஆர்எஸ் மனோகர், பண்டரி பாய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரைகண்டு சாதித்துள்ளது ‘இதயக்கனி’.

