பிரபல ‘ஓடிடி’ தளமான ‘ஜீ5’ல் வெளியாகி ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற ‘சட்டமும் நீதியும்’ இணையத்தொடரின் இரண்டாவது சீசன், அக்டோபர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இத்தொடர், நீதிமன்ற நடைமுறைகள், சட்டப் போராட்டங்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் சீசனில், மகளைப் பறிகொடுத்த தந்தை ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தீக்குளித்த அதிர்ச்சிகரமான வழக்கைக் கையில் எடுத்து, அதிகாரம், செல்வாக்கிற்கு எதிரான நீதிக்கான போராட்டத்தை நடிகர் சரவணன் திறம்படச் சித்திரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் சீசனிலும் கதையின் நாயகனாக சரவணன் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
இந்தப் புதிய அத்தியாயத்தில், கதைக்களத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவரது வலுவான திரையாளுமை இத்தொடருக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்துத் தொடரின் இயக்குநர் பாலாஜி செல்வராஜ் கூறுகையில், “இரண்டாம் சீசன் முற்றிலும் புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள், ஆழமான தார்மீகக் குழப்பங்களுடன் பயணிக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் சலுகைகள், அதிகாரம் தனிப்பட்ட முடிவுகள் எவ்வாறு உண்மையை மறைக்கின்றன என்பதை நீதியின் சாம்பல் நிறப் பகுதிகளின் வழியே ஆழமாகப் பேச உள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
