நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் கதையைக் கேட்டபோது அன்று இரவு தூக்கம் இல்லாமல் தவித்ததாக இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கூறினார் படத்தின் நாயகன் கார்த்தி.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா இப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியபோது, இயக்குநர் நலன் குமாரசாமியின் கதை தன்னை எந்த அளவுக்குப் பாதித்தது என்பதைப் பகிர்ந்துகொண்டார்.
“நலன் குமாரசாமி ஒரு நகைச்சுவையான கதையைச் சொல்வார் என்று பார்த்தால், ‘வா வாத்தியார்’ என்ற கதையைச் சொல்லி என்னைப் பதற வைத்தார்.
“இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று, அன்று இரவு முழுவதும் தூங்கமுடியாமல் தவித்தேன். அப்போது நான் பார்த்த தன்னம்பிக்கை காணொளியில், ‘எந்தவொரு விஷயம் உங்களை அதிகமாக பயமுறுத்துகிறதோ, எதைப் பார்த்து மிகவும் பயப்படுகிறோமோ, அதை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அங்குதான் நமக்கான வளர்ச்சியும் இருக்கும்’ என்பதைப் பார்த்தேன்.
“எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்க முடியாது. நாம் எத்தனை முறை ஜெயித்தாலும் தோற்றதை மட்டுமே பேசும் உலகம் இது. அதனால், தீவிரமாக இறங்கி அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன். இந்தக் கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது,” என்று கார்த்தி மேலும் தெரிவித்தார்.
இப்படம் இம்மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

