தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், தற்போது ஏழாவது மொழியைக் கற்று வருகிறார். அடுத்து சைகை மொழியைக் கற்க விரும்புகிறார்.
சென்னையில் நடைபெற்ற ‘அவள் விகடன்’ விருது வழங்கும் விழாவில், இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி நித்யா மேனனுக்கு ‘சிறந்த கலைஞர்’ விருதை வழங்கினார்.
“தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் எனக்குத் தெரியும். தற்போது ஏழாவது மொழியைக் கற்கிறேன்,” என்று விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய நித்யா மேனன் கூறினார்.
“ஆண்கள் செய்வதைப் பெண்களும் செய்வது பெண்ணியம் அல்ல, பெண்களின் வலிமையை வெளிக்காட்டுவதே உண்மையான பெண்ணியம்,” என்றார் அவர்.
தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்துப் பேசிய அவர், ‘மெர்சல்’ படத்தில் தாம் ‘தளபதி’ என்று அழைப்பது விஜய்யின் தாயாருக்கு மிகவும் பிடிக்கும் என்றும், ஒரு மனிதர் தம்மால் எட்டக்கூடிய உச்சத்தை அடைவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்திற்காக நித்யா மேனனையும் ஸ்ருதி ஹாசனையும் அணுக முயற்சி செய்ததாகவும், விரைவில் அவர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
தமிழில் ‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘இட்லி கடை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
கியூரி புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நித்யா மேனன் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். இயக்குநர் டிகே இயக்கத்தில், விக்ரம் கே. குமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றும் ‘டார்க் ஃபேன்டஸி’ திரைப்படத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துத் தயாரிக்கிறார்.
“ஆண்களை மையப்படுத்திய பிரம்மாண்டத் திரைப்படங்கள் என்னை ஈர்ப்பதில்லை,” என்ற நித்யா மேனன், தயாரிப்பாளராகக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான பன்முகத்தன்மை கொண்ட தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறினார்.
