“ஆணோ, பெண்ணோ... யாராக இருந்தாலும் பிரச்சினைகளுக்குப் பிரிவு என்பது தீர்வல்ல. எதற்காக அந்த முடிவை எடுக்கிறார்கள், எந்தக் காரணத்துக்காகப் பிரிகிறார்கள் என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்,” என்கிறார் நடிகை மீரா வாசுதேவன்.
இவர் திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகிவிட்டன. தற்போது சினிமா, சின்னத்திரை, இணையத்தொடர்கள் என வாழ்க்கைப் பயணம் அழகாகவும் சீராகவும் அமைந்திருப்பதாக விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைச் சுற்றி நேர்மறையான உறவுகள் நிறைந்துள்ளன. என் மண வாழ்க்கையில் மூன்றுமுறை பிரிவு ஏற்பட்டது குறித்தும் பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள். நான் மிகவும் துணிச்சலான, வலுவான பெண். அதனால் எதிர்மறை கருத்துகளைப் பொருட்படுத்துவது இல்லை.
‘உன்னைச் சரணடைந்தேன்’, `அறிவுமணி’, ‘ஜெர்ரி’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். ‘காவேரி’, ‘பெண்’, ‘சித்தி 2’ போன்ற திரைத் தொடர்கள் மூலம் நமக்கு நன்கு தெரிந்த முகமாக மாறியவர்.
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த மீராவை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய படம் ‘உன்னை சரணடைந்தேன்’.
தமிழில் இந்தப் படம், தெலுங்கில் ‘கோல்மால்’, இந்தியில் ‘ரூல்ஸ்’ என ஒரே சமயத்தில் மூன்று படங்களில் இவர் நாயகியாக நடித்த காலமும் இருந்தது.
“உண்மைதான். அந்த மூன்று படங்களில் இரண்டு படங்கள் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் வெளியாகி, நல்ல வசூல் கண்டன. அவையெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.
“என் வாழ்க்கையில் ‘உன்னை சரணடைந்தேன்’ படம் முக்கியமான மைல் கல்லாக அமைந்தது. மீராவால் முழு படத்தையும் தன் தோளில் தாங்கி நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுத்திய படம் இது.
தொடர்புடைய செய்திகள்
“தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத் திரையுலகிலும் எனக்கு தனி இடத்தைப் பெற்றுத்தந்தது. இப்படத்தில் பணியாற்றிய சமுத்திரக்கனி, இன்று பெரிய இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளார்.
“எனக்கு ஜோடியாக நடித்த வெங்கட் பிரபு பெரிய இயக்குநராக உள்ளார். இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று கூறியுள்ள மீராவின் சொந்த ஊர் தஞ்சாவூர்.
சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் அதிகமாம். சிறந்த நடிகைக்கான தமிழக, கேரள அரசுகளின் மாநில விருதைப் பெற்றுள்ளார். மேலும், தெலுங்கு, இந்தியிலும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு சிலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
“தமிழில் இதுவரை எனது முழு நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையவில்லை என்ற வருத்தம் உள்ளது. மேலும், தமிழில் நிறைய நடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தமிழ் ரசிகர்கள் மிகவும் அன்பானவர்கள். திறமையான நடிகர்களை, நல்ல நடிப்பை அங்கீகரிக்கக் கூடியவர்கள்,” என்று தமது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் மீரா வாசுதேவன்.
மூன்று முறை மணமுறிவு என்பதை எப்படிக் கடந்து வர முடிந்தது?
“இதற்காக நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் அதிகமான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன்.
“எல்லாருக்கும் கருத்து சொல்லும் உரிமை உண்டு. ஆனால், ஒருதரப்பினரின் விமர்சனங்கள், தாக்குதல்கள், முடிவுகள் என்னை எந்த வகையிலும் பாதிக்காது. எனினும், அனைவருக்கும் ஓர் அறிவுரை.
“விவாகரத்து பெற்றவர்கள் ஏற்கெனவே மனவலியில் இருப்பார்கள். அவர்களிடம் கனிவோடு பேசுங்கள்,” என்று கூறியுள்ளார் மீரா வாசுதேவன்.


