பிரபல பின்னணிப் பாடகி சின்மயியை வைத்து புதுப்புது சர்ச்சைகளை உருவாக்குவது வழக்கமாகிவிட்டது.
தொடர்ந்து சில தரப்பினர் அவரைக் குறிவைத்து அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று அவரும் தொடர்ந்து புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும், அவதூறு நீடித்து வருகிறது.
அண்மையில் சின்மயியின் புகைப்படங்களை விஷமிகள் சிலர் ‘மார்ஃபிங்’ செய்து அவதூறாகச் சித்திரித்து வெளியிட்டனர். இதைக் கண்டு வெகுண்டுபோன அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
“பெண்கள் எப்போதுமே ஆண்களுக்குக் கட்டுப்பட வேண்டும், அடங்கிப்போக வேண்டும் என ஆணாதிக்கச் சமூகம் விரும்புகிறது. அப்படி அடங்கிப்போகாத பெண்கள் செத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் குரூர எண்ணம் உடையவர்கள்தான் சமூக ஊடகங்களில் மோசமான பதிவுகளை இடம்பெறச் செய்கிறார்கள்.
“பெண்களை ஏதாவது ஒரு நிலையில் இழிவுபடுத்தும் இவர்கள், பேய் பிடித்தவள், வசியம் செய்தவள் என்று முன்பு சொன்னவர்கள் இப்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசமான படங்களை வெளியிட்டு அவதூறு செய்கிறார்கள்,” என்று சின்மயி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்களை அவதூறு செய்யும் அயோக்கியர்களுக்கு அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார் சின்மயி.

