தெலுங்கில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) வெளியான படம் 'ரணபாலி’.
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படம் என்பதாலும் இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டதாலும், ரணபாலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா, ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரத்தின் தாக்கத்தால், ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் ராஷ்மிகா.
ஏறக்குறைய 400 ஏழைக் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை அவர் வழங்கியுள்ளார். அரிசி, கோதுமை மாவு, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருள்கள் இவற்றில் அடங்கும். மேலும், அடுத்த ஓராண்டுக்கு இந்த உதவித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா, “உதவி செய்வதற்குப் பெரிய தொகையோ, மிகப்பெரிய முயற்சியோ தேவையில்லை. சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். என்னுடைய இந்தச் செயல் மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்,” என்றார்.
