மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் பிரபலமானவர் சாய் பல்லவி. தற்போது இரண்டு பாகங்களாக ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் பான் இந்திய நட்சத்திரமாக வருவதற்கான வாய்ப்புகள் சாய் பல்லவிக்கு நிறையவே இருக்கின்றன.
இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் பணிகளில் இறங்கியுள்ள தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் சுப்புலட்சுமி வேடத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் நடிகை சாவித்ரியின் கதையான மகாநதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதேபோல், எம்.எஸ். சுப்புலட்சுமியாக சாய் பல்லவி நடித்தால் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல விருதுகளும் பெருமைகளும் பெற்ற இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். தமிழ்த் திரையில் பெயர்பெற்ற நடிகையான அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளமொழி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார்.

