தான் திரையுலகிற்குள் நடிகையாக நுழைந்தது முற்றிலும் தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு என்றும் தொடக்கத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று கதைகள் எழுதுவதே தமது விருப்பமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ஷ்ருதிஹாசன்.
அண்மையில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தன்னுடைய தொடக்ககால திரையுலக அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஹே ராம்’ திரைப்படத்தில், தனது தாயார் சரிகாவுடன் இணைந்து ஆடை வடிவமைப்புக் கலைஞராகப் பணியாற்றினார் நடிகை ஷ்ருதிஹாசன்.
அப்போது படப்பிடிப்புத்தளத்தில் சர்தார் வல்லபாய் படேலின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்க உடனடியாக ஒருவர் தேவைப்பட்டதால், தற்செயலாக ஷ்ருதி அக்கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
“எனக்கு எப்போதும் கேமராவுக்குப் பின்னால் நின்று இயங்கவே விருப்பம். நான் எப்படி நடிகையானேன் என்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. என் பெற்றோர்கள் இருவருமே படப்பிடிப்புத்தளத்தில் கச்சிதமான வேலையை எதிர்பார்க்கும் மிகச்சிறந்த கலைஞர்கள்,” என்று ஷ்ருதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இசை மீது இருந்த விருப்பத்திற்காகவும் சுயசம்பாத்தியத்திற்காகவும் பின்னாள்களில் ‘லக்’ திரைப்படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் அதன் பிறகே நடிப்பு மீது தனக்கு உண்மையான ஆர்வம் உருவானதாகவும் கூறினார்.
கமல்ஹாசன், சரிகா ஆகிய இருபெரும் கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் தனது திரைப்பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றும் அவர் நெகிழ்ந்தார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’, துல்கர் சல்மானுடன் ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஷ்ருதி நடித்து வருகிறார்.
