நடிகை சில்க் ஸ்மிதா ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து மகிழ ஆசைப்பட்டதாகவும் அது கடைசிவரை நிறைவேறவே இல்லை என்றும் நடிகை குஷ்பு உருக்கமாகக் கூறியுள்ளார்.
அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில், தமது நெருங்கிய தோழியான சில்க் ஸ்மிதா குறித்துப் பல்வேறு நினைவுகளைக் குஷ்பு பகிர்ந்துகொண்டார்.
சில்க் ஸ்மிதாவைத் தாம் ‘விஜி’ என்றே அன்போடு அழைத்ததாகவும் அப்படி அழைக்கும்போதெல்லாம் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
திரையுலகில் தனக்கான எல்லைகளை வரையறுத்துக் கொள்ளவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் சில்க் ஸ்மிதா எப்போதுமே தனித்தே இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், “அவர் ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார்; திரைக்கு வெளியே ஓர் இயல்பான மனைவியாக வாழ விரும்பினார்.
“ஆனால், தனது காதலரால் அவர் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தமது காதலரின் குழந்தைகளுக்காக மிகவும் ஆசையுடன் பல பொருள்களை அவர் வாங்கி வருவார்,” என்றும் குஷ்பு நினைவுகூர்ந்தார்.
கவர்ச்சி உடையில் நடனமாடும் பெண்ணைச் சமூகம் பார்க்கும் விதத்தை அறிந்தே, அவர் தற்காப்பு யுக்தியாகத் தனிமையைக் கடைப்பிடித்ததாகக் குஷ்பு விளக்கமளித்தார்.
இருப்பினும், அந்த இயல்பான இல்லற வாழ்க்கை இறுதிவரை அவருக்குக் கிடைக்கவே இல்லை என்று குஷ்பு மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்தார்.
துணை நடிகையாகச் சினிமாவுக்குள் நுழைந்த விஜயலட்சுமி, 1979ஆம் ஆண்டு வெளியான ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபலமானார்.
தனது 18 ஆண்டுகாலத் திரைப் பயணத்தில் 450க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்தியச் சினிமாவில் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக மட்டுமன்றி, மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் சில்க் ஸ்மிதா திகழ்ந்தார்.
புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா, கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி மறைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
