உணர்வுகளால் தூண்டப்பட்டு பட்டை தீட்டப்படும் நாயகனின் கதை - ‘கொம்பு சீவி’

2 mins read
4c6412de-a1f4-4385-8fa0-e099ffbed71d
‘கொம்பு சீவி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினிமா விகடன்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து, ‘கொம்பு சீவி’ படத்தை இயக்கியுள்ளார் பொன்ராம்.

விரைவில் திரைகாண உள்ள இந்தப் படத்தில் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்பு வைகை அணையின் கட்டுமானப் பணியின்போது, அப்பகுதியில் இருந்த 12 கிராமங்கள் மொத்தமாக நீரில் மூழ்கிப் போய்விட்டன. அங்கு வசித்துவந்த மக்கள் என்னவாயினர், இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் கதையாம்.

‘கொம்பு சீவி’ என்ற தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக, கம்பீரமாக ஒலிப்பதாக பெரும்பாலானோர் கூறியுள்ளனராம்.

“கொம்பு சீவிவிடுதல் என்பது ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்தும் வாசகம். அரசியல் முதற்கொண்டு குடும்பம் வரை இதைப் பயன்படுத்துவோம். என் கதையின் நாயகனை உணர்வுகளால் தூண்டிவிட்டு, அவன் பட்டை தீட்டப்படுவதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

“இந்தக் கதையை எழுதும்போது சக்திவாய்ந்த கதாபாத்திரங்கள் இருப்பதை உணர முடிந்தது. சண்முக பாண்டியனை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, கண்டிப்பாக காலஞ்சென்ற திரு விஜயகாந்தின் நினைவு வந்துபோகும்.

“கேப்டன் பல சாதனைகளைச் செய்தவர். அவரது மகனுக்கு இப்போது ஒரு நல்லதொரு துணை வேண்டும் என நினைத்தேன். ராஜ்கிரண், நெப்போலியன், சத்யராஜ் போன்றவர்களுக்குப் பிறகு சரத்குமார்தான் நினைவுக்கு வந்தார்.

“சரத்குமார், விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர். அவரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர் என்பதெல்லாம் கூடுதல் வசதியாக அமைந்தன. நான் எதிர்பார்த்தது போலவே சண்முக பாண்டியனுக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளார் சரத்குமார்.

சண்முகபாண்டியன் குறித்து?

“விஜயகாந்த்தின் மகனுக்கு தந்தையின் உடல்மொழி அப்படியே அமைந்திருக்கிறது. எனது படங்களில் நகைச்சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும். சண்முக பாண்டியனுக்கு நகைச்சுவை வருமா என்று யோசித்தபோது, அவரே தாமாக முன்வந்து, பயிற்சிப் பட்டறைக்கு நேரம் ஒதுக்குவோம் எனக் கூறினார். சொன்னபடி செய்தார்.

“விஜயகாந்த் மகன் என்பதை நான் மறந்துவிடுவேன். நான் மட்டுமல்ல, நீங்களும் மறந்துவிட வேண்டும். முற்றிலும் வித்தியாசமாக நடித்தால்தான் மக்கள் மனத்தில் இடம்பெற முடியும் என்றேன். இதை உணர்ந்து நியாயமான உழைப்பைக் கொடுத்துள்ளார் சண்முக பாண்டியன்.

“சண்டைக் காட்சிகளில் அவருக்குப் பயிற்சியே தேவையில்லை. அப்பாவைப் போல் இவரும் அசத்துகிறார்.

“கதாநாயகி தார்ணிகா காவல்துறை ஆய்வாளராக வருகிறார். எந்தவிதமான சட்டதிட்டங்களையும் அறவே மதிக்காத 12 கிராம மக்களைக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்புள்ள கதாபாத்திரம். அறிமுகப் படம் என்ற சுவடு அறவே தெரியாத வகையில் கச்சிதமாக நடித்துள்ளார் தார்ணிகா. இவருக்கு என தனி சண்டை, துரத்தல் காட்சிகள் உள்ளன.

“யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளன. ஒரு தாயின் பெருமைகளைக் கூறும் பாடலை மட்டும் திரு இளையராஜா பாட வேண்டும் என மனதார விரும்பினேன். ஒரு மாத காத்திருப்புக்குப் பிறகு அது சாத்தியமானது.

“தந்தையும் மகனும் இணைந்து பாடிய அழகும் அந்தப் பாடலில் வாய்த்துள்ளது,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் பொன்ராம்.

குறிப்புச் சொற்கள்