தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவாஜி ராவாக தொடங்கி சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்

4 mins read
0619c84c-d92a-4b36-b387-ef3ba7886aee
-

கலைந்த முடி, கறுப்பு நிறம் சகி­த­மாய் கலை­யு­ல­கில் சிவாஜி ராவாக கால்பதித்து, கன­வு­லக நாய­கர்­க­ளின் இலக்­க­ணத்­திற்கு புது வடி­வம் தந்த 'சூப்­பர் ஸ்டார்' ரஜி­னி­காந்த் நேற்று தனது­ 72வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

வேக­மான நடை, வித­வி­த­மான உடல் பாவனை, வித்­தி­யா­ச­மான வசன உச்­ச­ரிப்பு, வியக்க வைக்­கும் நடிப்பு, விறு­வி­றுப்­பான சண்டை என இந்த விந்தை மனி­த­ரின் சிறப்­பு­கள் தமிழ்த் திரை ரசி­கர்­க­ளின் சிந்­தை­யில் ஆழ­மாக பதிந்த ஒன்று.

ஆன்­மி­கத்­தின் ஆழம் அறிந்த இந்த அபூர்வ திரை நாய­கன், 1950 டிசம்­பர் 12ஆம் தேதி, கர்­நா­டக மாநி­லம் பெங்­க­ளு­ரு­வில் பிறந்­தார்.

ஸ்ரீரா­ம­கி­ருஷ்ணா மடத்­துப் பள்­ளி­யான 'ஆச்­சார்யா பாட­சாலை'யில்­தான் தனது பள்­ளிப்­ப­டிப்பை படித்­தார். தியா­னம், பிரா­ணா­யா­மம் போன்ற மூச்­சுப் பயிற்சி எல்­லாம் இந்­தப் பள்­ளி­யில் கற்று, பக்தி அனு­ப­வங்­கள் கிடைக்­கப் பெற்­றார்.

சிவா­ஜி­ராவ் என்ற மனி­த­ருக்­குள் ஒளிந்­தி­ருந்த நடி­கரை முதன் முத­லில் அடை­யா­ளம் கண்­டது இவ­ரது நண்­பர் ராஜ்­ப­க­தூர். சினி­மா­விற்கு வரு­வ­தற்கு முன் தொழில் துறை­யில் எடு­பி­டி­யாக இருந்து, மூட்டை தூக்­கும் தொழி­லா­ளி­யாக, தச்­சுப் பட்­டறை தொழி­லா­ளி­யாக பல வேலை­களில் ஈடு­பட்­டார்.

பின்­னர் கர்­நா­டகா போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தில் சிவாஜி நகர், சாம்­ராஜ் பேட்­டையை இணைக்­கும் 134 எண் கொண்ட பேருந்­தில் கண்­டக்­ட­ராக பணி­பு­ரிந்­தார். நடிப்­பின்மீது கொண்ட ஆர்­வத்­தால் தமிழ்­நாடு அரசு திரைப்­ப­டக் கல்­லூ­ரி­யில் சேர்ந்து, நடிப்­புத் துறை­யில் பயிற்சி பெற்­றார்.

அங்கு கே.பால­சந்­த­ரின் பார்வை இவர் மீது பட 1975ல் அவ­ரது இயக்­கத்­தில் வெளி­வந்த 'அபூர்வ ராகங்­கள்' படத்­தில் நடி­க­ராக அறி­மு­க­மா­னார்.

சிவா­ஜி­ராவ் என்ற இவ­ரது இயற்­பெ­ய­ரை­யும் சினி­மா­விற்­காக ரஜி­னி­காந்த் என பெயர் மாற்­றம் செய்­தார் இயக்குநர் பால­சந்­தர்.

"பைரவி வீடு இது­தானா?", "நான் பைர­வி­யின் புரு­ஷன்" என்று தனது நண்­பர் கமல்­ஹா­ச­னி­டம் பேசிய வச­னமே, ரஜினி திரைப்­ப­டத்­தில் பேசிய முதல் வச­னங்கள்.

'மூன்று முடிச்சு', 'அவர்­கள்', '16 வய­தி­னிலே', 'ஆடு புலி ஆட்­டம்', 'காயத்ரி' என ஆரம்ப காலங்­களில் தொடர்ந்து வில்­ல­னாக நடித்­தார் ரஜினி.

முதன் முத­லில் குணச்­சித்­திர வேட­மேற்று இவர் நடித்த திரைப்­ப­டம்­தான் 'புவனா ஒரு கேள்­விக்­குறி?'.

"பைரவி வீடு இது­தானா?" என்று ரஜினி திரை­யில் பேசிய முதல் வச­னத்­தின் முதல் வார்த்தை 'பைரவி'தான் ரஜினி கதா­நா­ய­க­னாக நடித்து வெளி­வந்த முதல் படம்.

தமிழ்த் திரை­யு­ல­கின் ஆளுமை இயக்­கு­நர்­களில் ஒரு­வர் என அறி­யப்­படும் இயக்­கு­நர் மகேந்­தி­ர­னின் 'முள்­ளும் மல­ரும்' படத்­தின் முதல் கதா­நா­ய­க­னும் இவரே. ரஜி­னி­காந்த் இரட்டை வேட­மேற்று நடித்த முதல் திரைப்­ப­ட­மும் இயக்­கு­நர் மகேந்­தி­ர­னின் 'ஜானி' திரைப்­ப­டம்தான்.

'ராஜ ராஜ சோழன்' திரைப்­ப­டத்­திற்­குப் பின் சினி­மாஸ்­கோப்­பில் உரு­வான முதல் சமூக திரைப்­ப­டம், ரஜி­னி­காந்த் நடிப்­பில் வெளி­வந்த 'காளி'. ரஜினி நடிப்­பில் வந்த முதல் முழு­நீள நகைச்­சுவை திரைப்­ப­டம் 'தில்லு முல்லு'.

சிவா­ஜி­யின் ரசி­க­ரான நடி­கர் ரஜி­னி­காந்த், திரைத்­து­றைக்கு வரு­வ­தற்கு முன் அவ­ரின் மனம் கவர்ந்த நடி­க­ராக இருந்­த­வர் நடி­கர் நாகேஷ். தனது நண்­ப­ரும் நடி­க­ரு­மான கமல்­ஹா­ச­னோடு இணைந்து ஏறக்­கு­றைய 18 திரைப்­ ப­டங்­கள் வரை நடித்­தி­ருக்­கின்­றார்.

எம்­ஜி­ஆ­ருக்­குப் பின் 'சத்யா மூவீஸ்' தயா­ரிப்­பில் 'இரா­ணு­வ­ வீ­ரன்' முதல் 'பாட்ஷா' வரை 6 படங்­களில் நடித்­தி­ருந்­தார். ஏவி­எம் நிறு­வ­னத்­திற்­காக ரஜினி நடித்த முதல் படம் 'முரட்­டுக்­காளை'. இந்­தப் படத்­தில்­தான் ரஜி­னி­காந்­திற்கு 'சூப்­பர் ஸ்டார்' என்ற பட்­டம் உறுதி செய்­யப்­பட்­டது. ரஜினி கதை, திரைக்­கதை எழுதி தயா­ரித்த முதல் திரைப்­ப­டம் 'வள்ளி'.

1983ல் 'அந்தா கானூன்' என்ற ஒரு வெற்­றிப்­ப­டத்­தின் மூலம் தனது பாலி­வுட் கலை­யு­ல­கப் பிர­வே­சத்தை துவக்­கி­னார் ரஜினி. ரஜினி நடித்த ஒரே ஹாலி­வுட் திரைப்­ப­டம் 'ப்ளட் ஸ்டோன்'.

இயக்­கு­நர் சுரேஷ் கிருஷ்ணா இயக்­கத்­தில் ரஜினி நடித்த 'பாட்ஷா' திரைப்­ப­டம்­தான் அவ­ரது அர­சி­யல் பார்­வையை உல­குக்கு காட்­டி­யது.

தமி­ழகத்­தில் 175 நாட்­கள் ஓடி சாதனை படைத்த 'முத்து' திரைப்­ப­டம், ஜப்­பான் நாட்­டில் திரை­யி­டப்­பட்டு அங்­கும் ரஜி­னிக்கு ஒரு ரசி­கர் கூட்­டத்தை உரு­வாக்­கி­யது.

தென்­னிந்­தி­யா­வில் அதிக நாட்­கள் ஓடிய திரைப்­

ப­டம் என்ற பெரு­மையை பெற்­றது ரஜி­னி­யின் 'சந்­தி­ர­முகி' படம். அந்­தப் படம் 890 நாட்­கள் ஓடி­யது.

சங்­கர் இயக்­கத்­தில் ரஜினி நடித்து வெளி­வந்த 'சிவாஜி', 'எந்­தி­ரன்' திரைப்­ப­டங்­கள் பல சாத­னை­கள் புரிந்து, தமிழ் திரை­யு­ல­கில் புதிய வர­லாறு படைத்­தன.

எதிர்­பார்த்த அளவு ஓடாத ரஜி­னி­யின் திரைப்படம் 'பாபா'. தற்பொழுது நவீன தொழில்­நுட்­பத்­து­டன், டிஜிட்­டல் வடி­வில் புதுப்­பொ­லி­வு­டன் ஒரு சில மாற்­றங்­க­ளு­டன், அவ­ரது பிறந்த நாளை ஒட்டி வெளி­யாகி உள்­ளது.

1996ல் நடை­பெற்ற தமி­ழக சட்­ட­சபை தேர்­

த­லின்­போது, அப்­போ­தைய ஆளுங்­கட்­சி­யான

அதி­மு­க­விற்கு எதி­ராக இவர் பேசி­ய­து அதி­மு­க­வின் தோல்­விக்கு ஒரு முக்­கிய கார­ண­மா­க­ இருந்­தது.

அதன் கார­ண­மாக ரஜினி ரசி­கர்­கள், ரஜினி முதல்­வர் பத­விக்கு போட்­டி­யிட அழைப்பு விடுத்த வண்­ணம் இருந்­தனர். இறுதியில் தேர்­தலை சந்­திக்­கப்­போ­வ­தாக கூறிய ரஜினி பின்­னர் உடல்­நிலை உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளைக் கார­ணம் காட்டி பின்­வாங்­கி­னார்.

'பத்­ம­பூ­ஷன்', 'பத்­ம­வி­பூ­ஷன்', 'தாதா சாகேப் பால்கே' என மத்­திய அர­சின் விரு­து­கள் கிடைக்­கப் பெற்று கௌர­விக்­கப்­பட்­டார் ரஜினி. தமி­ழக அர­சின் 'கலை­மா­மணி விருது', 'எம் ஜி ஆர் விருது', 'தமிழ்­நாடு அரசு சினிமா விருது', 'பிலிம் ஃபேர் விருது' என இவர் வாங்­கிய விரு­து­க­ளின் பட்­டி­யல் நீண்டு கொண்டே இருக்கும்.

அய­ராத உழைப்­பும், அற்­ப­ணிப்பு உள்­ள­மும் கொண்­டி­ருந்­தால், சாமா­னி­ய­னும் சாதிக்க இய­லும் என்­பது, சூப்­பர் ஸ்டார் ரஜினி கடந்து வந்துள்ள பாதை உணர்த்­தும் உண்மை.