விஜய் படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தம்மை அணுகியது உண்மை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
எனினும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் விஜய் படத்தில் நடிக்க இயலாது என்று தாம் கூறிவிட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"எனினும் எதிர்காலத்தில் விஜய் படத்தில் நடிப்பேன். எனது இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைத்து, ரசிகர்கள் ஆதரவுடன் அதைப் பிரம்மாண்ட படைப்பாக அளிக்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது.
"தற்போது 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தை முடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதை சொல்லி அவரை எனது இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்புகிறேன்," என்கிறார் விஷால்.
இவர் நடிக்காததால் தற்போது நடிகர் அர்ஜுனை ஒப்பந்தம் செய்துள்ளனர். பூசையுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.
இதற்கிடையே, அஜித்தின் புதுப் படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலும் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அஜித். இதில்தான் சில நிமிடங்களுக்கு மட்டுமே வந்து போகும் வில்லனாக நடிக்குமாறு தனுஷிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம் விக்னேஷ் சிவன்.

