தென்னிந்திய திரையுலகில் முதன் முறையாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட ‘சூப்பர் ஹியூமன்’ உலகத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது ‘வெப்பன்’ திரைப்படம். குகன் சென்னியப்பன் இயக்கி உள்ளார்.
சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் ராஜீவ் மேனன், தென்னிந்தியாவில் ‘டி.சி. காமிக்ஸ்’, ‘மார்வெல்’ போன்ற கதைக் களத்தைக் கொண்டு ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாகியிருப்பது இதுவே முதல்முறை என்றார்.
“இயக்குநர் தனது காட்சிமொழியை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை தமிழில் உருவாக்க முடியும் என நினைத்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.
“இதில் எனக்கும் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அக்காட்சிகளைப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது,” என்றார் ராஜீவ் மேனன்.

