புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்தியாவும் இஸ்ரேலும் வலியுறுத்தியுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளில் சகிப்புத்தன்மைக்கு அறவே இடம் இல்லை எனவும் இரு நாடுகளும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் நவம்பர் 19ஆம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர்.
அப்போது இருதரப்பு உத்திபூர்வ, பங்காளித்துவத்தில் காணப்படும் வேகம் குறித்து மனநிறைவை தெரிவித்த இரு தலைவர்களும் இருதரப்பு பரஸ்பர நன்மைகளுக்கான உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.
பயங்கரவாதத்தைக் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த இரு பிரதமர்களும் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் வெளிநாடுகளிலும் ஒருபோதும் சகித்துக்கொள்ள இயலாது என்றும் இத்தகைய அணுகுமுறையே தொடரும் என்றும் வலியுறுத்தினார்.
தொலைபேசி வழியிலான இருவரது ஆலோசனையின்போது மேற்காசியா குறித்தும் கருத்துகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.
குறிப்பாக, காஸா அமைதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.
காஸா அமைதித் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் வட்டார ரீதியான, நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா, இத்தாலி பேச்சு
இதனிடையே, இந்தியாவும் இத்தாலியும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை எதிர்ப்பதில் இணைந்து செயல்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லிக்கு வருகை தந்துள்ள இத்தாலிய துணைப் பிரதமர் அண்டோனியோ சஹானி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இத்தாலிய தலைவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது வரவேற்கத்தக்கது என்றும் இது மிகவும் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, நல்ல உறவுகளுக்கு வழிவகுத்துள்ளது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகளில் இத்தாலியும் ஒன்று. ‘ஜி20’ உச்சநிலை மாநாட்டில் இருநாட்டுப் பிரதமர்களும் சந்தித்தபோது பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுமுயற்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டன என்றார் ஜெய்சங்கர். இது மிகவும் நேர்மறையான நடவடிக்கை என்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை எதிர்ப்பதில் இத்தாலியுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

