திருமணங்களுக்கோ விருந்து நிகழ்ச்சிகளுக்கோ சென்றால் தாம் அங்கு சாப்பிடுவதே இல்லை என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
தமது தீவிர ரசிகர்கள்தான் இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் தொழிலதிபர் நிகில் காமத்தின் ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்வது குறித்த அவரது பதில் இது.
“நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்லமாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் ‘செல்ஃபி’ எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருப்பேன். ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் ‘செல்ஃபி’ கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும்.
“சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா என்று பலர் கேட்பதுண்டு. வெளியே சந்திப்பதற்காக அப்படிக் கேட்டிருக்கக்கூடும்.
“இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முரண். யாரும் சாப்பிட விடமாட்டார்கள்.
“ஒரு திருமணத்திற்குச் சென்றால்கூட எல்லோரும் வந்து என்னுடன் படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். அங்கும் யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள்.
“அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை,” என்று ரகுமான் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது இந்தப் பேட்டியைப் படித்த பலர், அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளனர். ரசிகர்கள் வேறுவிதமாக தங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதே பேட்டியில் தனது சிறு வயதில் மிகவும் சிரமப்பட்டதாகவும் தனது பெற்றோர் தம்மை சிரமப்பட்டு ஆளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார் ரகுமான்.
“நாங்கள் குடியிருந்த வீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என என் தந்தை ஆசைப்பட்டார். அதற்காக மூன்று வெவ்வேறு வேலைகளைப் பார்த்தார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் காலமானபோது எனக்கு ஒன்பது வயதுதான் ஆகியிருந்தது. அதன் பிறகு என் தாயார் சிரமப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கினார்,” என்று ரகுமான் கூறியுள்ளார்.

