துபாயில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றது. இதில் போர்ஷே 991 கப் கார் (எண் 901) ரேஸில் இவரது அணி மூன்றாவது இடம் பிடித்தது. ஜிடி4 பிரிவில் ‘ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்’ (Spirit of the Race) எனும் விருதையும் அந்த அணி தட்டிச்சென்றது.
கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்ததும் இந்திய தேசியக் கொடியுடன் ரசிகர்களைச் சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித். அத்துடன், வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கியபோது இந்திய தேசியக்கொடியுடன் மேடையேறி தனது தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
முன்னதாக, இப்போட்டிக்காக கடந்த சில நாள்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், போட்டியிலிருந்து அவர் விலகினார். ஆனால், அஜித்தின் அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அஜித்தின் அணி போட்டியில் வெற்றி பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அரசியல், திரையுலகப் பிரபலங்களும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். “24எச் துபாய் 2025ல் அஜித்தும் அவரது குழுவினரும் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது மகிழ்ச்சி. அவருக்கும், அவரது அணிக்கும் வாழ்த்துகள். கார் பந்தயத்தில் தமிழக விளையாட்டுத் துறை சின்னத்தைக் காட்சிப்படுத்தியதற்காக ‘அஜித் குமார் ரேசிங்’ அணிக்கு நன்றி. நாட்டிற்கும், தமிழகத்திற்கும் இன்னும் பெருமை சேர்க்க அஜித் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என தனது எக்ஸ் பதிவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“வாழ்த்துக்கள் அஜித் குமார். சாதித்துவிட்டீர்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ,” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்தில் கூறியுள்ளார். “அஜித் குமார் ரேஸிங் அணி தன் முதல் பந்தயத்திலேயே அபார சாதனை படைத்திருக்கிறது. என் நண்பர் அஜித்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்,” என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் மாதவன், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மிகவும் பெருமையாக உள்ளது. என்னவொரு மனிதர் அஜித் குமார்,” என்று குறிப்பிட்டுள்ளார். “ஏ.கே. சார், உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள். பெருமையான தருணம்,” எனத் தனது பதிவில் வாழ்த்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்களைப் போன்று மேலும் பல திரைப்பிரபலங்களும் ரசிகர்கள் அஜித்திற்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.