அம்மா சொன்னதைக் கேட்டதும் அழுகை வந்துவிட்டது: கிரித்தி ஷெட்டி

2 mins read
7da224b1-2eab-4940-b6a4-fe66372eeabe
கிரித்தி ஷெட்டி. - படம்: ஹெர்ஜிந்தகி
multi-img1 of 2

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இப்படக்குழுவினர் அண்மையில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

படத்தின் நாயகி கிரித்தி ஷெட்டி பேசுகையில், இந்தப் படத்தின் மூலம் தாம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது, தமக்குக் கிடைத்த பெரும் ஆசிர்வாதமாகத் தோன்றுகிறது என்றார்.

அதற்காக படத்தின் இயக்குநர் நளன் குமாரசாமிக்கு நன்றி தெரிவித்த அவர், தமிழில் அதிகம் பேசியதில்லை என்பதால் தமது பேச்சில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதற்காக மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“அதன்படி, என்னுடைய கதாபாத்திரம் படத்தில் மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஆன்மாக்கள் குறித்துப் படிக்கும் ஒரு கதாபாத்திரம். இந்திய சினிமாவில் இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை நான் பெரிதாகப் பார்த்தது இல்லை. இந்தப் படம் எம்ஜிஆருக்கு நல்லதொரு புகழஞ்சலியாக இருக்கும்.

“எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரியும். அதே நேரம் இன்றைய தலைமுறையினருக்கு பெரிதாக அவரைப்பற்றி தெரியாது. தனிப்பட்ட முறையில் எனக்கு எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும்.

“அவர் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். பலரும் அவரைப் பற்றி கூறியுள்ளனர். மிகப்பெரிய ஊடகமான சினிமாவை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அதனை அவர் செய்துள்ளார்,” என்றார் கிரித்தி ஷெட்டி.

இந்தப் படத்தில் நடித்தபோது ஒரு தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தமாகி இருந்தாராம். அதனால் காலையில் ஹைதராபாத், மாலையில் சென்னை என்று பணியாற்ற வேண்டி இருந்ததாம்.

“ஒருநாள் ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பின்போது அசதியில் தூங்கிவிட்டேன். அப்போது அங்கிருந்த ‘லைட்மேன்’ அண்ணன்கள் முதல் அனைவரும் எனக்காக சத்தமே இல்லாமல் வேலை பார்த்துள்ளனர்.

“நான் தூங்கி எழுந்த பிறகு என் அம்மாதான் இந்த விஷயத்தைச் சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. இப்படிப்பட்ட அரவணைப்பைத்தான் தமிழ் மக்கள் எனக்குத் தந்துள்ளனர்,” என்றார் கிரித்தி ஷெட்டி.

“‘வா வாத்தியார்’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக உருவாகியுள்ளது. இது எல்லாருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது, ‘நாம் இணைந்து புது உலகை உருவாக்கப் போகிறோம், எனவே புது முயற்சிகள் இருக்கும்’ என்றார்.

“இந்தப் படம் நிச்சயமாக உங்களுக்குப் புது உலகை அறிமுகப்படுத்தும்,” என்கிறார் கிரித்தி ஷெட்டி.

மூத்த நடிகர் சத்யராஜ் நடிக்கும் படத்தில் தானும் இருப்பதைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறினார் கிரித்தி ஷெட்டி. சத்யராஜும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இப்படத்தில் அமையவில்லையாம்.

எனினும், இன்னொரு படத்தில் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகச் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்