நடிகர் விமல் தமிழில் நாயகனாக நடிக்கத் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் ‘சார்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அண்மைய பேட்டியில் இப்படம் குறித்த பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு இந்நாள் வரை இதுபோன்ற மாற்றங்கள் குறித்து ஏதும் தெரியாமல் போய்விட்டது என்றார்.
15 ஆண்டுகளாக ஒரு நாயகனாக தாம் பயணிப்பதை பெரிய மகிழ்ச்சியாகக் கருதுவதாகவும் ‘பசங்க’ படத்தில் தம்மை நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜை நேரில் சந்தித்துப் பேசுமாறு தமக்கு முதலில் அறிவுறுத்தியது நடிகர் விஜய் சேதுபதிதான் என்றும் கூறியுள்ளார்.
“இத்தனை ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் நான் எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். அவற்றுள் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பதுதான் முக்கியமானது.
“நான் ‘விலங்கு’ இணையத் தொடரில் நடித்த பிறகுதான் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதில் நடித்த பிறகுதான் மக்கள் எப்போதுமே கதை, அதைப் படமாக்கும் விதம் ஆகியவை புதிதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் புரிந்தது.
“இதை உணர்ந்த பிறகு நல்ல கதைகளாகத் தேர்வுசெய்து வருகிறேன்,” என்கிறார் விமல்.
தம்மை இன்னும் வளர்ந்து வரும் ஒரு கதாநாயகனாக நினைப்பதாகவும் குடும்பங்களுக்குப் பிடித்த நாயகனாக இருக்கவே விரும்புவதாகவும் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் எப்போதுமே என்னை அதிரடி நாயகனாக கருதியதே இல்லை. அதனால்தான் குடும்பத்துடன் படம் பார்க்க விரும்புவோர் நான் நடித்த படங்களைப் பார்க்க வருவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பெயரை தாம் சம்பாதித்திருப்பதாகச் சொல்லும் விமல், ஏற்கெனவே ‘வாகை சூடவா’ படத்திலும் ஆசிரியராக நடித்துள்ளார்.
போஸ் வெங்கட் எப்போதுமே சமூக அக்கறை கொண்டவர் என்றும் அதனால் அவரது படம் நல்ல கருத்தைச் சொல்லும் என்பதாலும் ‘சார்’ படத்தில் நடிப்பதாகவும் சொல்கிறார் விமல்.
“இந்தப் படம் சமூகத்தின் மீதான அக்கறையின் அடிப்படையில் உருவாகிறது என்பதை இயக்குநர் என்னிடம் முன்பே தெளிவுபடுத்திவிட்டார். அவரது சொந்த ஊரில் நடந்த கதைதான் இப்போது படமாகிறது.
“விஜய் நடித்த ‘கோட்’ படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்தான் எங்களுடைய படத்தையும் வெளியிடுகிறது,” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் விமல்.
இந்தப் படத்தில் இவரின் தந்தையாக ‘பருத்தி வீரன்’ சரவணன், வில்லனாக தயாரிப்பாளர் சிராஜ் நடித்துள்ளனராம்.
“நான், விஜய் சேதுபதி, சூரி மூவரும் ஒரு காலத்தில் ஒன்றாக வாய்ப்பு தேடி அலைந்தோம். இப்போதும்கூட அப்படித்தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம். எனினும் அன்று முதல் இன்று வரை மாறாத அன்பும் நட்பும் தொடர்கிறது. அன்று எப்படி பேசினோமோ, பழகினோமோ அப்படித்தான் இன்றும் இருக்கிறோம்.
“நேரம் கிடைக்கும்போது தொடர்புகொண்டு பேசுகிறோம். சூரி நடித்த ‘கருடன்’, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படங்களைப் பார்த்துவிட்டு இருவரிடமும் நீண்ட நேரம் பேசினேன். சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ படத்தை இன்னும் பார்க்கவில்லை.
“நண்பன் நடித்த படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது. நிச்சயம் பார்ப்பேன்,” என்று சொல்லும் விமல், அடுத்து எழில் இயக்கத்தில் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தில் நடிக்கிறார்.