பொங்கலுக்குத் திரைகாண்கிறது விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

பொங்கலுக்குத் திரைகாண்கிறது விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

படம்: இடிவிபாரத்.காம்

27 Nov 2026 - 6:09 pm

2 mins read

சூப்பர் டீலக்ஸ் படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம், வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‎‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லல், வித்தியாசமான திரைமொழியால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.

‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் ஐந்து பாடல்கள், வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான தருணங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் அமைந்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதி.
பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதி. - படம்: இடிவிபாரத்.காம்

மேலும், அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களது அனுபவங்களையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால், ரசிகர்கள் தங்களைப் படத்தின் கதையுடன் எளிதாகப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‎இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். முன்னதாக, தியாகராஜா குமாரராஜா வசனம் எழுதிய ‘ஓரம்போ’ படத்திற்கு இசையமைத்திருந்தார். வழக்கமாகத் தனது திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் தியாகராஜா குமாரராஜா, இப்படத்தின் படப்பிடிப்பைக் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, குறுகிய காலத்திலேயே நிறைவுசெய்துள்ளார்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ராஜ் பி. ஷெட்டி முதன்முறையாகத் தமிழில் தனது சொந்தக் குரலில் பேசியுள்ளார். ‎‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, தியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழி, விஜய் சேதுபதியின் நடிப்பு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படம் எனப் பல்வேறு அம்சங்கள் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்