ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த ‘படையப்பா’ படத்தை மறுவெளியீடு செய்துள்ளனர். இதற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்ததைவிட பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்கில் பார்க்க வந்த ரசிகைகளில் லதா ரஜினிகாந்தும் ஒருவர்.
அவரிடம் பட வெளியீடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது தமக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம் என்றார்.
“ரஜினி திரையுலகில் அறிமுகமான 25வது ஆண்டில் ‘படையப்பா’ படம் வெளியானது. இப்போது 50வது ஆண்டில் மீண்டும் ‘படையப்பா’ படத்தைப் பார்க்க வந்திருக்கிறேன்.
“இத்தகைய வரவேற்பைக் கொடுத்துள்ள ரசிகர்களுக்கு நன்றி. மேலும் ரஜினியின் ஆதரவாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்றி.
“அவர் (ரஜினி) மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இது அவர் எழுதிய கதை. நடிகர் திலகம் சிவாஜியுடன் நடித்திருந்தார். இதையெல்லாம் நினைக்கும்போது உள்ளம் உணர்ச்சிவசப்படுகிறது.
“மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து எங்களை ஆதரிக்கிறார்கள். அந்த அன்பை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. மக்களின் அன்புக்குத் தலைவணங்குகிறேன்,” என்று கூறிய லதாவிடம், ‘படையப்பா’ இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு சிரித்தபடியே, ரசிகர்களைப் போலவே நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார் லதா.

