சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நலப் பணிகளை ஆற்றிவரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், தனது 15வது ஆண்டு நிறைவு விழாவையும் கல்லூரியின் 75வது ஆண்டு பவள விழாவையும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடத்தியது.
2010ல் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இச்சங்கம் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், பொதுமக்களுக்கான சொற்பொழிவுகள், தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள், வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துதல், குடும்ப தினம், பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள், நடைபயிற்சிப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சிகள், மாணவர்களுக்குக் கல்வி உபகார நிதி, முதியோர்க்கு சக்கர நாற்காலி மற்றும் உணவுப் பொருள்கள் நன்கொடை, சிறுவர்களுக்குப் புத்தாடை நன்கொடை, மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் நன்கொடை, சமூக அமைப்புகளோடு ஒருங்கிணைந்து தொண்டூழியம் செய்தல் உள்ளிட்ட பல சமூக நலச் சேவையாற்றி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இச்சங்கம் 150 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்திருப்பதாக சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ.காதர் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் அமானுல்லாஹ், ‘எங்கள் பணி’ என்ற தலைப்பில் சங்கத்தின் சேவைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
சங்கத்தின் 150 நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட காணொளி அங்கத்தைத் தொடர்ந்து, கல்லூரியின் பொருளாளர் ஹாஜி எம்.ஜெ.ஜமால் முஹம்மது, கல்லூரி முதல்வர் டாக்டர் து.இ.ஜார்ஜ் அமலரெத்தினம் இருவரும் வாழ்த்துரை வழங்கினர்.
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் இயற்றிய ‘சின்னஞ்சிறு எழில் நாடு’ என்ற குழுப் பாடலை இசைமணி பரசு கல்யாண் இயக்கத்தில் சித்தாந்த் பரசு கல்யாண், வேதாந்த் பரசு கல்யாண், வியாசன் வெங்கடேஷ், ஸ்ரியா ரகு, இஷான் கார்த்திக், சித்தேஷ் கார்த்திக், ஷாய் காத்யாயானி ஆகியோர் பாடினர்.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், 15 ஆண்டுகளில் இச்சங்கம் 150 நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை படைத்திருப்பதைப் பாராட்டினார்.
எஸ்ஜி60 நடைப்பயிற்சி போட்டியில் வெற்றிபெற்ற முஹம்மது ஹஜ், பஷீர் அஹமது, ஹௌது நைனார் ஆகியோருக்குப் பரிசுகளையும் குழுப் பாடல் பாடிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
சங்கத்தின் 150 நிகழ்ச்சிகள், கல்லூரியின் சாதனைகள், சமூகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், சான்றிதழ்கள், வண்ணப் படத்தொகுப்பு அடங்கிய 15ஆம் ஆண்டு சிறப்பு மலரைச் சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி ‘மீண்டும் ஒரு கருவறை தந்த தாயே!’ என்ற கருப்பொருளில் நகைச்சுவை கலந்த சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் உதவிச் செயலாளர் முனைவர் க.அப்துஸ் சமது, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் மு.சையது அலி பாதுஷா, விடுதி இயக்குநர் முனைவர் கா.ந.முஹம்மது பாசில், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ஜெ. முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் சுபஹான் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள், சங்க உறுப்பினர்கள் என ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டனர்.

