உல்லாசம், உற்சாகம் உண்டாக நீங்கள் ஆடிப்பாடி மகிழலாம். யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகளை மெல்லிசையுடன் கற்றுப் பயன் பெறலாம்.
இந்த அம்சங்களைக் கொண்ட ‘கோநூடல்’ (GoNoodle) செயலி, உலக அளவில் சிறுவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாழ்வியல் (lifestyle) செயலியாகும்.
175 நாடுகளைச் சேர்ந்த 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
இதில் 300க்கும் மேற்பட்ட குட்டிக் காணொளிகள் உள்ளன. பதற்றமாக இருக்கும்போது அமைதிப்படுத்தவும், சோம்பலாக இருக்கும்போது உற்சாகப்படுத்தவும் இந்தக் காணொளிகள் உதவுகின்றன.
இதில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், அது விளையாடுவதுபோல மிகவும் உல்லாசமாக இருக்கும். நாம் எதைச் செய்தாலும் துணிவுடனும் விவேகத்துடனும் செய்தால், கடினமான செயல்களும் நாளடைவில் விளையாட்டைப்போல நமக்கு இன்பம் தரும்.
பிறவி முதற்கொண்டே நம்மைப் பயம் பல்வேறு வகைகளில் தொற்றிக்கொண்டு வருகிறது. ஆனால், நம்மை அமைதிப்படுத்தக் கற்றுக்கொள்ளும்போது, நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தலாம்.
நல்ல வார்த்தைகளையும் மெல்லிய இசையையும் செவிமடுக்க ‘கோநூடல்’ (GoNoodle) செயலி உதவக்கூடும்.
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இதனைப் பயன்படுத்தலாம். வீட்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் இணைந்து, செயலி பரிந்துரைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். காரிலோ ரயிலிலோ நீண்ட பயணம் செய்யும்போது ஏற்படும் சலிப்பைப் போக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
மகிழ்ச்சியாக விளையாடி உங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். எழுந்து குதித்து மகிழ இன்றைய பொழுதே உகந்தது!

