மனித உடலில் இருப்பதாகக் கூறப்படும் ஏழு சக்கரங்களின் தத்துவங்களையும் சிறப்புகளையும் வெவ்வேறு கலை வடிவங்களின்வழி வெளிக்கொணர்ந்தது மகூலம் கலைக்கூடத்தின் ‘மஹார்ப்பணம்’.
அகம் நாடகக் குழுவின் ‘பிளாக்பாக்ஸ்’ அரங்கில் செப்டம்பர் 20ஆம் தேதி நடந்தேறிய நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கரகாட்டம், தாள வாத்திய இசை, சிலம்பம் போன்ற பல்வேறு கலைப் படைப்புகள்வழி அவ்வேழு சக்கரங்களின் தனித்துவங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.
‘ரீ-இன்கார்னேஷன்’ இசைக்குழு தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் ஏழு சக்கரங்களைப் பிரதிநிதிக்கும் விதமாக ஏழு ராகங்களைக் கொண்டு வெவ்வேறு பாடல்கள் படைக்கப்பட்டன.
“பல்வேறு ராகங்களைப் பயன்படுத்தி, பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதே எங்களது இலக்காக இருந்தது.
“மகிழ்ச்சி, சோகம், ஊக்கம், கோபம் போன்ற பல்வேறு ரசங்களை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருந்தது,” என ‘ரீ-இன்கார்னேஷன்’ இசைக்குழுத் தலைவர் கௌஷிக் சுரேஷ் கூறினார்.
நிகழ்ச்சியில் ‘டமருகம்’, ‘சிலம்பம் கோர்வை சிங்கப்பூர்’ கலைக் குழுக்களும் கார்த்திகேயன், சஞ்சனா ராஜேந்திரன், மகூலம் கலைக்கூடத்தின் இளைய பரதநாட்டிய கலைஞர்கள் என பலரும் நிகழ்ச்சியில் துடிப்புடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கெடுத்த நடனமணி மாத்துகுமில்லி ஜாஷ்வி, 13, தாம் இந்நிகழ்ச்சிவழி புதிதாக பலவற்றைக் கற்றுக்கொண்டதாகப் பகிர்ந்தார்.
“ஏழு சக்கரங்களைப் பற்றியும் ஒவ்வொரு சக்கரமும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் நான் புரிந்துகொண்டேன்.
“ஒவ்வொரு சக்கரத்திற்குப் பின்னுள்ள அர்த்தத்தைத் தெரிந்துகொண்டது நாட்டியத்தின்மீது எனக்கு மேலும் மதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் நாங்கள் செய்த அசைவுகளுக்கும் பாவைகளுக்கும் பின்னிருந்த ஆழமான அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது,” என்றார் அவர்.
‘மஹார்ப்பணம்’ தமது நடனப்பள்ளியான மகூலம் கலைக்கூடத்தின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகச் சென்ற ஆண்டு அறிமுகம் கண்டதென மீனலோசனி சேஷன் பகிர்ந்துகொண்டார்.
“இவ்வாண்டின் நிகழ்ச்சி நல்லதொரு கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டுமென்று சிந்தித்தபோது ஏழு சக்கரங்களைக் கலை வடிவங்களைக் கொண்டு படைக்கும் யோசனை எழுந்தது.
“பார்வையாளர்கள் முழுமையையும் சொந்த சிந்தனையையும் உணர வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
“விழிப்புணர்வு என்பது மேடையில் வெளிப்படுத்தப்படும் ஒன்று மட்டுமன்று. அது நம்மைப் பற்றி புரிந்துகொள்வதற்கும் சமநிலையைக் கண்டறிவதற்கும் உடலையும் தாண்டிய ஒரு மேலான நிலையோடு இணைவதற்குமான ஒரு பயணம்,” என்றார் அவர்.
