சமூக ஊடகம் பரிந்துரைப்பதால் விரும்பாத காணொளிகள் மீதும் ஈர்ப்பு

சமூக ஊடகப் பயனர்களிடையே பரவலாகும் ‘ஹேட் வாட்சிங்’ போக்கு

சமூக ஊடகம் பரிந்துரைப்பதால் விரும்பாத காணொளிகள் மீதும் ஈர்ப்பு

2 mins read
dc1cf015-e165-42d1-92be-63ed0c76920f
பிடிக்காத உள்ளடக்கங்கள் கொண்ட காணொளிகளைத் தொடர்ந்து பார்க்க சமூக ஊடகப் பரிந்துரையும் முக்கியக் காரணம் என இளையர்கள் கருதுகின்றனர். - படம்: இணையம்

சமூக ஊடகங்களில் சில காணொளிகளைப் பார்க்க நேரிடும்போது, ‘இவற்றையெல்லாம் யார் பார்ப்பது?’ எனும் சிந்தனை தோன்றலாம். இருப்பினும், எரிச்சலூட்டும், கோபத்தை ஏற்படுத்தும், அர்த்தமற்ற, பயனற்ற உள்ளடக்கங்களைப் பார்க்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

ஓர் உள்ளடக்கம் பிடிக்காதபோதும் அதனைத் தொடர்ந்து பார்ப்பதை, ‘ஹேட் வாட்சிங்’ என்று இளையர் சமூகம் வரையறுக்கிறது.

அதற்குப் பின்னால் வெறுப்பையும் மீறிய ஆர்வம், ஆராய்ச்சி மனப்பான்மை, சமூகப் பகிர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன என்று இளையர்கள் கூறுகின்றனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் கணக்கியல் துறை மாணவி மாதுரிஜா மோகனதாசன், 19, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும், பழங்களை மையமாகக் கொண்ட காணொளிகளை அடிக்கடி பார்ப்பதாகச் சொன்னார்.

“பழங்கள் திருமணம் செய்வது, சண்டையிடுவது, குடும்பப் பிரச்சினைகளில் சிக்குவது போன்ற கதைகள் வரும். அவை மிகவும் அபத்தமாக இருக்கும். ஆனாலும் ஏனோ தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்,” என்று கூறும் அவர், அவை வேடிக்கையாக இருப்பதாகக் கருதுகிறார்.

தனக்குப் பிடிக்காத கருத்துகளைக் கொண்ட காணொளிகளை அடிக்கடி பார்ப்பதாகக் கூறினார் தொடக்கக்கல்லூரி மாணவி சதாசிவம் க்ருபாலினி, 19.

“நான் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்ட படைப்பாளர்களின் காணொளிகளைப் பார்ப்பேன். அவர்களின் சிந்தனைகள் குறித்துப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்றார் அவர். மேலும், “நாம் ஏற்காத, நமக்குத் தெரியாத கருத்துகளைக் கேட்பதும் முக்கியம். நான் அவர்களுடன் உடன்பட மாட்டேன்; ஆனால், தெரிந்துகொள்ள விரும்புவேன்,” என்றார்.

சில தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகி தொடர்ந்து துன்புறுத்தப்படும் காட்சிகள் தனக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், அவர்கள் அச்சூழ்நிலையிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறார்கள் என்பதை அறியத் தொடர்ந்து பார்ப்பதாகவும் க்ருபாலினி குறிப்பிட்டார். சில திரைப்படங்களிலும் இதே அனுபவம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

அண்மையில் வெளியீடு கண்ட ‘தக் லைஃப்’ திரைப்படம் தனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை என்றும், இருந்தாலும் கதை பின்னர் மேம்படுகிறதா என்று அறிந்துகொள்வதற்காகத் தொடர்ந்து பார்த்ததாகவும் அவர் கூறினார்.

“ஒருவேளை அடுத்த காட்சியில் படம் நல்லதாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதனால்தான் தொடர்ந்து பார்க்கிறோம்,” என்றார் க்ருபாலினி.

சமூக ஊடகப் பரிந்துரைகள்

இந்தப் பழக்கத்திற்கு சமூக ஊடகத்தின் பரிந்துரைச் செயல்முறை முக்கியக் காரணமாக இருப்பதாக இருவரும் கருதுகின்றனர்.

“இன்ஸ்டகிராம் அல்லது டிக்டாக் தளங்களில் ஒரு காணொளியைத் தவிர்த்துவிட்டால், அதுபோன்ற காணொளிகள் பரிந்துரைக்கப்படுவது குறையலாம். ஆனால், யூடியூப் தளத்தில் அதே மாதிரியான காணொளிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்,” என்றனர் அம்மாணவியர்.

“சில நேரங்களில் நான் என்ன பார்க்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை. செயலி என்னைத் தொடர்ந்து பார்க்கச் செய்கிறது,” என்றார் மாதுரிஜா.

மேலும், நண்பர்களுடனான உரையாடல்களும் இந்த ‘ஹேட் வாட்சிங்’ பழக்கத்தை ஊக்குவிப்பதாக இருவரும் கூறினர்.

“தனியாகப் பார்ப்பதைவிட, நண்பர்களுடன் அதைப் பற்றி பேசும்போது, அது சுவாரசியமாகவும் கூடுதல் உற்சாகம் தரும் வகையிலும் அமைகிறது,” என்றார் க்ருபாலினி.

குறிப்புச் சொற்கள்