மின்தூக்கியைச் சரிசெய்து கர்ப்பிணிக்கு உதவிய நாயகருக்கு விருது

2 mins read
இவ்வாண்டு முதன்முறையாக நடைபெற்ற மின்தூக்கி, மின்படித் துறைக்கான விருது நிகழ்ச்சியில் சிறந்த நிபுணருக்கான விருதைப் பெற்றார் ‘கோனி’ நிறுவனத்தில் மின்தூக்கி பழுதுபார்ப்பவராகப் பணியாற்றும் கணே‌ஷ் பிரசாத் வாசுதேவன், 48. 
32ddc2bc-3c82-4e8f-8bc3-b32ee3dc7305
‘கோனி’ நிறுவனத்தில் மின்தூக்கி பழுதுபார்ப்பவராகப் பணியாற்றும் கணே‌ஷ் பிரசாத் வாசுதேவன், 48, தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டிடமிருந்து சிறந்த நிபுணருக்கான விருதைப் பெறுகிறார்.  - படம்: என்டியுசி

பிரசவத்துக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், மின்தூக்கியில் சிக்கிக்கொண்டபோது அவசரமாக மின்தூக்கியைப் பழுதுபார்த்து அவரை மீட்டார் திரு கணே‌ஷ்.

மற்றொரு முறை, சீனப் புத்தாண்டன்று ஒரு சீனக் குடும்பம் 20 நிமிடங்களாக மின்தூக்கியில் சிக்கித் தவித்தபோது அவர்களை திரு கணே‌ஷ் காப்பாற்றினார்.

“மறுநாள் அவர்கள் என்னை அழைத்து எனக்கு நன்றி தெரிவித்ததுடன், பண நோட்டுகளைக் கொண்டுள்ள சிவப்பு உறைகளை (ஹோங் பாவ்) தந்தார்கள்,” என அவர் நினைவுகூர்ந்தார்.

‘கோனி’ எனும் பன்னாட்டு நிறுவனத்தில் திரு கணே‌ஷ் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார். மின்தூக்கி, மின்படிகளுக்கான தொழில்நுட்பராக பணியைத் தொடங்கிய அவர், மூத்த தொழில்நுட்பராக முன்னேறி, கடந்த ஈராண்டுகளாக மின்தூக்கி பழுதுபார்ப்பவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

விருது விழாவில், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் உடன் திரு கணேஷ் பிரசாத் வாசுதேவனும் அவரின் மனைவியும்.
விருது விழாவில், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் உடன் திரு கணேஷ் பிரசாத் வாசுதேவனும் அவரின் மனைவியும். - படம்: என்டியுசி

“வலுவான தொழில்நுட்பத் திறனும் குழு உணர்வும் கொண்ட திரு கணேஷ் மற்றும் அவரது குழுவால் மின்தூக்கி பழுதாகும் சம்பவங்களின் விகிதம் கடந்த 12 மாதங்களில் 20 விழுக்காடு குறைந்துள்ளது. அத்துடன், முதல்முறையிலேயே வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் பழுதுபார்ப்புப் பணிகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது,” என தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் பாராட்டினார்.

25 ஆண்டுகளுக்குமுன் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தபோது மின்விளக்கைக்கூடப் பழுதுபார்க்க தமக்குத் தெரியாது எனத் திரு கணே‌ஷ் சிரித்தபடி கூறினார். 

இங்குள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மின்தூக்கி, மின்படித் துறையில் ‘உயர் நைட்டெக்’ பயின்றதோடு மின்தூக்கிப் பராமரிப்பில் தேர்ச்சி சான்றிதழும் பெற்றதை அடுத்து, அவர் இத்துறையில் பணியாற்றினார்.

‘கோனி’யில் சேர்ந்தபின் அந்நிறுவனம் அளித்த நிபுணத்துவப் பயிற்சிமூலம் அவர் தொடர்ந்து தம்மை மேம்படுத்திக்கொண்டார். 

‘இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ எனப்படும் பொருள்களில் இணையம், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்களைச் சார்ந்த பயிற்சிகளையும் திரு கணே‌ஷ் மேற்கொண்டார்.

‘கோனி 24/7 கனெக்ட்’ போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளுடன் தமது பணி எளிதாகியுள்ளதாக அவர் கூறினார். 

“இப்போது கைத்தொலைபேசிச் செயலியிலேயே மின்தூக்கிக்கு என்ன பிரச்சினை என்பது உடனடியாகத் தெரிந்துவிடும். அதற்கேற்றவாறு, பழுதுபார்ப்புக்குத் தேவைப்படும் கருவிகளைத் தொழில்நுட்பர்கள் முன்கூட்டியே எடுத்துச் செல்லலாம்,” என்று திரு கணே‌ஷ் கூறினார்.

சிரமமிகு சூழலிலும் வேலையிடம் தமக்குத் துணைபுரிந்ததால் தம்மால் இத்துறையில் நீடிக்க முடிந்ததாகத் திரு கணே‌ஷ் நன்றியுணர்வுடன் தெரிவித்தார்.

மலேசியாவில் இருக்கும் மனைவியையும் மகளையும் விட்டுச் சிங்கப்பூரில் பணியாற்றுவதில் சிரமம் என்றாலும் திரு கணே‌ஷ், தம் கடமையில் கண்ணாய் இருந்தார்.

இன்று திரு கணே‌ஷ், புதிய ஊழியர்களுக்கு வழிகாட்டியாகப் பயிற்சி வழங்குகிறார்.

நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பழுதுபார்ப்புப் பணியைச் சீராகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள அவர் ஊக்குவிக்கிறார்.

“கூடுதலான இளையர்கள் இத்துறைக்கு வர வேண்டும். அவர்களுக்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன,” என்றார் திரு கணே‌ஷ்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டிடமிருந்து சிறந்த நிபுணருக்கான விருதைப் பெற்றார் ‘கோனி’ நிறுவனத்தில் மின்தூக்கி பழுதுபார்ப்பவராகப் பணியாற்றும் கணே‌ஷ் பிரசாத் வாசுதேவன், 48.
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டிடமிருந்து சிறந்த நிபுணருக்கான விருதைப் பெற்றார் ‘கோனி’ நிறுவனத்தில் மின்தூக்கி பழுதுபார்ப்பவராகப் பணியாற்றும் கணே‌ஷ் பிரசாத் வாசுதேவன், 48. - படம்: என்டியுசி
குறிப்புச் சொற்கள்