வசதி குறைந்தோருடன் விழாக்கால உணர்வைப் பகிர சிறுவர் படை அழைப்பு

2 mins read
7373b2ee-5bc1-4c89-b2b2-30ee2cc8da0e
‘ஷேர்-எ-கிஃப்ட்’ திட்டத்தின் தொடக்க விழாவில் சிறுவர் படையினர். - படம்: சாவ்பாவ்

வசதி குறைந்தோருக்கு கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் அன்பளிப்புகளைப் பகிர்வதற்கான சிறுவர் படையின் (Boy’s Brigade) அன்பளிப்பு வழங்கும் திட்டம் இவ்வாண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்திட்டத்தில் கலந்துகொண்டு, விநியோகத்திற்கு உதவ தொண்டூழியர்கள் தேவை என்று சிறுவர் படை அறிவித்துள்ளது.

தற்போது அன்றாடம் தேவைப்படும் தொண்டூழியர்களுள் 25 விழுக்காட்டினர் மட்டுமே முன்வந்துள்ளனர் என்ற நிலையில், மேலும் 75 விழுக்காடு விநியோகங்களை நிறைவேற்ற தொண்டூழியர்களுக்கான தேவை நிலவுகிறது.

பண்டிகை உணர்வை எல்லோருக்கும் பரப்பும் நோக்கத்துடன் 40,000க்கும் மேற்பட்ட பயனாளர்களை அடையும் இலக்கை சிறுவர் படையின் ‘ஷேர்-எ-கிஃப்ட்’ திட்டம் கொண்டுள்ளது.

பின்தங்கியுள்ள குடும்பங்களிடம் வெற்றிகரமாக கொண்டுசேர்க்கப்படும் ஒவ்வோர் உணவுப் பொருளும் கிறிஸ்துமஸ் பண்டிகையை அர்த்தமுள்ள வகையில் மாற்ற முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இயக்கத்திற்கு நன்கொடைகளின் மூலம் மக்களின் ஆதரவு கிடைத்திருந்தாலும், மனிதவளத்திற்கான அவசரத் தேவை இருப்பதாக சிறுவர் படைத் தலைவர் ஹென்ரி டான் வலியுறுத்தினார்.

“மேலும் 75 விழுக்காடு விநியோகங்கள் மீதமுள்ள நிலையில், அனைத்துப் பயனாளர்களின் தேவைகளை நிறைவேற்ற பொதுமக்கள் தொண்டூழியர்களாக எங்களோடு இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதோடு, தொடர்ந்து நன்கொடை அளித்து உங்கள் ஆதரவை வழங்குங்கள்,” என்றார் அவர்.

ஒவ்வொருநாளும் காலை 10 மணி, நண்பகல் 12 மணி, மதியம் 2 மணி என தொண்டூழியர்களுக்கு மூன்று தெரிவுகள் இருக்கின்றன. வாகன வசதியுள்ளோர் டிசம்பர் 9 முதல் 26 வரை இடம்பெறும் விநியோக நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். வாகன வசதி இல்லாதோர் டிசம்பர் 20, 21ஆம் தேதிகளில் விநியோகங்களில் கலந்துகொண்டு, பயனாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

பேநவ் குறியீடு, giving.sg, ‘ஏஎக்ஸ்எஸ்’ (AXS) நிலையங்கள் வழியாக டிசம்பர் 31 வரை மக்கள் நன்கொடை அளிக்கலாம்.

மேல்விவரங்களுக்கு http://www.bbshare.sg/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்