தம் மூத்த மகனுக்கு ‘ஆட்டிசம்’ எனப்படும் தொடர்புத் திறன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டபோது, திரு வினோத் நந்தகுமாரனின் வாழ்விலும் தொழில் பாதையிலும் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான 41 வயது திரு வினோத், 2007 முதல் சரக்கு மேலாண்மை துறையில் முழுநேரப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், மகனின் தொடர்ச்சியான சிகிச்சைகளும் வகுப்புகளும், முழுநேர வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழலை உருவாக்கின.
எனவே, 2019ஆம் ஆண்டு தனியார் வாகன ஓட்டுநரானார் திரு வினோத். அந்த வேலை, வாரத்தில் மூன்று முறை மகனைப் பயிற்சி வகுப்புகளுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல அவருக்கு வழிவகுத்தது.
பாலர் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி பகலில் வேலைக்குச் செல்லும்போது, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வார் வினோத். மனைவி வீட்டிற்கு திரும்பியபின், வினோத் இரவு முழுவதும் வாகனம் ஓட்டுவார்.
பணம் வந்தாலும், அந்த வேலை வினோத்திற்கு மனநிறைவைத் தரவில்லை.
கொவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது, வாழ்க்கை முழுக்க இப்படியே வாகனம் ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ற கேள்வி அவரை உலுக்கியது.
காற்பந்து ரசிகரான வினோத், விளையாட்டுப் புள்ளிவிவரங்களில் இருந்த ஆர்வத்தைத் தொடர்ந்து, தரவுப் பகுப்பாய்வு குறித்த தகவல்களைத் தேடத் தொடங்கினார். சுயமாக ‘பைத்தான்’ நிரலாக்கத்தை கற்று, அது தொடர்பான சான்றிதழ் படிப்பை முடித்தார். காற்பந்துப் பகுப்பாய்வுக்கான தனிப்பட்ட ‘டாஷ்போர்ட்’ கருவி ஒன்றையும் உருவாக்கினார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் ஜெனரேஷன் சிங்கப்பூர் நிறுவனமும் இணைந்து 2023ல் நடத்திய ‘ஜூனியர் டேட்டா இன்ஜினியர்’ பயிற்சி முகாமில் சேர்ந்து, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை வினோத தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“அதற்குமுன் 250க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்தும் எந்தப் பலனும் கிட்டவில்லை. அந்தப் பயிற்சி முகாம் நடுத்தர வயதினரின் தொழில் மாற்றத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுகொள்ளும் நிறுவனங்களுடன் நேரடியாகப் பங்கேற்பாளர்களை இணைத்தது,” என்றார் அவர்.
பயிற்சி முகாம் முடிந்த இரண்டு வாரங்களுக்குள், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் வணிக அறிவாண்மை மேம்பாட்டாளராக அவருக்கு வேலை கிடைத்தது.
இன்று, கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் செயல்திறனை கண்காணிக்கவும், கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்களைக் கண்டறியவும் உதவும் டாஷ்போர்ட் கருவிகளை வினோத் உருவாக்குகிறார்.
வாகன ஓட்டுநராக இருந்தபோது பெற்ற சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதிதான் இப்போது கிடைக்கிறது என்றாலும், இந்த வேலையில் அவர் அளவற்ற மனநிறைவு காண்கிறார்.
“ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியும், சாதித்த உணர்வும் கிடைக்கிறது. இதைத்தான் நான் தேடினேன்,” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார்.
தற்போது வினோத் வணிக பகுப்பாய்விலும் அவர் மனைவி உளவியலிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளனர். பட்டக்கல்வி இன்னும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என்பதுடன் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்குமென்றும் நம்புகிறார்கள்.
தமது வேலை மாற்றங்கள் எளிதாக ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டங்களும் காரணம் என்றார் வினோத். முதலில், தனியார்-வாடகை வாகன உரிமம் பெறுவதற்கு $1,200 கிரெடிட்களைச் செலவிட்டார். பின்னர், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள $4,000 நிதியைப் பயன்படுத்தினார். தற்போது மீதமுள்ள கிரெடிட்களைச் செலுத்தி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வணிக பகுப்பாய்வு பட்டப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.
“தொழில் வாழ்க்கையின் நடுப்பகுதியில் புதிய துறைக்கு மாற விரும்புவோருக்கு இத்திட்டங்கள் மிகுந்த துணையாக உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில், பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில், ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டங்கள் எப்படி நடுத்தர வயதினருக்கு புதிய திறன்களையும், வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்பதற்கு வினோத்தின் பயணத்தை ஒரு சிறந்த உதாரணமாகச் சுட்டினார்.
“நடுத்தர வயதில் தொழிலை மாற்றுவது ஒரு குறுந்தொலைவு ஓட்டமல்ல, அது ஒரு நெடுந்தொலை ஓட்டம். தொடர்ந்து முயற்சி, தியாகம், குடும்பத்தின் உறுதியான ஆதரவு அனைத்தும் தேவை. ஆனால் முழுமனத்துடன் நம் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்டால், சாதிக்க முடியாதது என்று ஒன்றுமில்லை,” என்று வினோத் கூறினார்.