மூன்று ஆண்டுகளுக்குமுன் மாரடைப்பால் தம் கணவரை இழந்தபோது செய்வதறியாது தவித்தார் திருவாட்டி நஸ்ரின் (உண்மைப் பெயரன்று).
ஒற்றையாளாக மூன்று பிள்ளைகளை வளர்க்கவேண்டிய சூழல்.
“என் மகன் விமானப் பொறியாளராக விரும்புகிறார். என் மகள்கள் இருவரும் ஆசிரியர்களாக விரும்புகின்றனர். எனக்கெனத் தனி ஆசை ஏதுமில்லை. அவர்களின் ஆசைதான் என்னுடையதும்,” என்கிறார் திருவாட்டி நஸ்ரின்.
பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கவும், நிதி நிலைமையைச் சமாளிக்கவும் உணவகத்தில் உதவிக் கணக்காளராக அவர் பணியாற்றத் தொடங்கினார். சிண்டா, முஸ்லிமின் அறக்கட்டளை நிதிச் சங்கம் போன்ற அமைப்புகள் அவருக்கு உதவிவருகின்றன.
“மகள் கணிதப் பாடத்தில் சற்றுக் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் துணைப்பாட வகுப்புக்கு அனுப்புகிறேன். அதற்க மட்டும் மாதம் $100 செலவாகிறது. தற்போது என்னால் வருங்காலத்துக்குச் சேமிக்கவே முடியவில்லை,” என்கிறார் அவர்.
இந்நிலையில், வீட்டிற்குத் தேவைப்படும் பொருள்கள், உணவுப்பொருள்களை வழங்கும் நிகழ்ச்சிகள் தமக்கு உதவியாக இருப்பதாகத் திருவாட்டி நஸ்ரின் குறிப்பிட்டார்.
அவ்வகையில், செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் எக்ஸ்போவில் மேபேங்க் சிங்கப்பூர் முதன்முறையாக நடத்திய கனிவன்புச் சந்தைமூலம் அவர் பயன்பெற்றார்.
14 சமூகப் பங்காளிகளுடன் பெரிய கனிவன்புச் சந்தை
மேபேங்க் குழுமம் 13வது முறையாக, குழுமத்தின் அனைத்துலக ‘சிஆர்’ தினத்தையொட்டி கனிவன்புச் சந்தையை நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வருடாந்தர நிகழ்வில் முதியோர், வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 2,100 பேர் $100 மதிப்பிலான கனிவன்புப் புள்ளிகளைப் பெற்றனர். அவற்றைக் கொண்டு அவர்கள் தேவையான மளிகைப் பொருள்களையும் வீட்டுப் பொருள்களையும் வாங்கினர். ஒரே நாளில் S$200,000 மதிப்பிலான சமூக ஆதரவு வழங்கப்பட்டது.
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி), பெர்த்தாபிஸ், தபுங் அமால் ஐடில்ஃபித்ரி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை உள்ளிட்ட 14 சமூகப் பங்காளிகள் தம் பயனாளிகளை இச்சந்தைக்கு அழைத்துவந்தன.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலீம் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார். வெவ்வேறு அமைப்புகள் கூட்டுமுயற்சிகள் மேற்கொள்வதன் சிறப்பை அவர் பாராட்டினார்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் பிலால், “இத்தகைய பெருமுயற்சியில் மலாய் முஸ்லிம் அமைப்புகளுடன் இந்திய அமைப்பான நாங்கள் கைகோப்பது இதுவே முதன்முறை,” என்றார்.
இச்சந்தைக்கான நிதி உட்பட, மேபேங்க் சிங்கப்பூர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு S$6.5 மில்லியனைத் தன் சமூகத் தாக்க நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளது.
அதில் முக்கியப் பங்கு வகிப்பது இஸ்லாமிய வங்கியியல்மூலம் கிடைத்த ‘ஸக்காட்’ நிதி. இது முஸ்லிம் குடும்பங்களுக்கு உதவப் பயன்படுத்தப்படுகிறது.
இரு குழந்தைகளை வளர்க்கும் நூர் காசே அப்துல்லா, ஓரிரு நாள்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த நிலையில்தான் இச்சந்தை பற்றி அறிந்தார்.
சிரமமான காலத்தில் உதவும் ஏற்பாட்டாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். சோப்பு, எண்ணெய் போன்ற நெடுநாள்கள் பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தெரிவுசெய்ததாக அவர் கூறினார்.
பொருள்களின் விலைப் பற்றிய மாறுபட்ட கருத்துகள் நிலவின. விலை சற்று அதிகமாக இருப்பதாக ஒருவர் கூற, வெளியே வாங்குவதைவிட மலிவான விலையில் இருப்பதாக ஏற்பாட்டாளரும் வாடிக்கையாளர் ஒருவரும் கூறினர். சேமியா பேக்கெட் $2, பாத்திரம் கழுவும் திரவம் $2, துணி துவைக்கும் சோப்புதூள் $6, குளியல் சோப் திரவம் $6, தலைமுடிக்கான ஷாம்பூ $8 என்ற விலைவாசியில் இருந்தது.
“விலைவாசித் திட்டமிடலை எளிதாக்க, $2, $4, $6, $8 எனும் பிரிவுகளில் விற்கிறோம். அவற்றுக்கேற்ப விலையையும் குறைத்தோம்; உதாரணத்துக்கு $5.90ஆக இருந்தால் $4ஆகக் குறைத்தோம். நாங்கள் வரவேற்ற 14 சமூக அமைப்புகள் வழக்கமாகத் தரும் அதே பிராண்ட் பொருள்களை வழங்காமலிருப்பதிலும் கவனம் செலுத்தினோம்,” என்றார் மேபேங்க் சிங்கப்பூர் இஸ்லாமிய வங்கியியல் தலைவர் சஸாலி.
பயனாளிகளின் பரிவு
சந்தையில் அனைத்துப் பொருள்களையும் வாங்கியபின் பயானாளிகள் தங்களுக்குத் தேவைப்படாத ஏதேனும் ஓரிரு பொருள்களை நன்கொடையளிக்க வாய்ப்பளிக்கப்பட்டது (பே இட் ஃபார்வர்ட் சாவடி). அப்படிச் செய்தோரைப் பாராட்ட ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருள்கள், விற்கப்படாத பொருள்களுடன் சேர்த்து 14 அமைப்புகளுக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படவுள்ளதாகக் கூறினார் மேபேங்க் சிங்கப்பூர் இஸ்லாமிய வங்கியியல் தலைவர் சஸாலி.
மேபேங்க் ஊழியர்கள் நன்கொடையளித்த சிறுவர் பொருள்களையும் பயனாளிகளால் இலவசமாகத் தெரிவுசெய்யமுடிந்தது.
ஓய்வுபெற்ற இணையரான ஹவாபி ஜமாலுதீன், 56, முகமது ரமீஸ், 61, இருவருக்கும் பல உடல்நலப் பிரச்சினைகள் உண்டு; யூனோஸ் வட்டாரத்தில் ஈரறை வீட்டில் அவர்கள் வசிக்கின்றனர். கணுக்காலிலும் கழுத்திலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் திரு ரமீஸ். அவர்கள் இருவரும் தம் அண்டைவீட்டார் ஐஷா அலாவிக்குட்டி, 66, உடன் வந்திருந்தனர்.
“பொதுவாக, இத்தகைய நடவடிக்கைகளில் ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட பொருள்களே நமக்குத் தரப்படுவது வழக்கம். ஆனால், இந்தச் சந்தையில் நாங்கள் விரும்பிய பொருள்களைப் பெற முடிந்தது,” என்றார் திருவாட்டி ஹவாபி.
இதுபோன்ற ஒரு சந்தைமூலம் பயன்பெற்றுவிட்டால் மற்ற அமைப்புகள் நடத்தும் சந்தைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் போகலாம் என்றும் மற்ற வட்டாரங்களில் நடைபெறும் சந்தைகளில் பங்கேற்க அனுமதி பெறுவது கடினம் என்றும் வருந்தினார் திரு ரமீஸ்.
இத்தகைய சந்தைகள் அடிக்கடி நடைபெறுவதைத் தாம் விரும்புவதாகக் கூறிய திருவாட்டி நஸ்ரின், மற்ற வகையிலான உதவிகளையும் வரவேற்றார்.
“எடுத்துக்காட்டாக, பள்ளிச் செலவுகளுக்கு அரசாங்கம் பெரிதும் கைகொடுக்கிறது. அதுபோல, துணைப்பாடச் செலவுகளுக்கும் உதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் அவர். காய்கறிகள், இறைச்சி போன்றவை சந்தையில் இருந்தாலும் நன்றாக இருக்கும் என அவர் கூறினார்.