பண்பாடு, ஒற்றுமை பேணிய தீபாவளிக் கொண்டாட்டம்

பண்பாடு, ஒற்றுமை பேணிய தீபாவளிக் கொண்டாட்டம்

1 of 2
படம்:  மேரிமவுண்ட் சமூக மன்றம்
படம்:  மேரிமவுண்ட் சமூக மன்றம்

29 Nov 2026 - 8:00 am

2 mins read

மேரிமவுண்ட் - தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘தீப ஒளியும் உறவுகளும்’ எனும் கருப்பொருளுடன் கூடிய தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக நவம்பர் 14ஆம் தேதி குடும்பங்களும் குடியிருப்பாளர்களும் ஒன்றுகூடினர்.

இசை, நடனம், கொண்டாட்டத்தால் மேரிமவுண்ட் சமூக மன்றம் களைகட்டியது.

இந்நிகழ்ச்சியில் வெளியுறவு, எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சரும் மேரிமவுண்ட் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான கான் சியாவ் ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

‘தீப ஒளியும் உறவுகளும்’ என்ற கருப்பொருள், விளக்குகளின் ஒளியையும் மக்களிடையேயான பிணைப்புகளையும் ஒன்றிணைக்கிறது. 

முதியவர்கள், இளையர்கள், சமூகக் கலைஞர்கள் எனப் பலரும் இந்த மாலை நேர நிகழ்வில் கலந்துகொண்டது அக்கருப்பொருளுக்கு உயிரூட்டுவதாக விளங்கியது. 

இயந்திர மனிதன் பங்கேற்பு

தீபாவளி நிகழ்ச்சியில் முதன்முறையாக ‘மித்ரன்’ என்ற ரோபோ அங்கம் வகித்தது. 

இந்தியப் பாடலுக்கு மித்ரன் நடனமாடியது, தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் சுவைமிகு அனுபவத்தைக் கொண்டாட்டத்திற்கு வழங்கியது.

இந்த நூதனமான தருணத்தைப் படம்பிடிக்க வட்டாரவாசிகள் பலரும் இயந்திர மனிதர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

வானொலி புகழ் விமலா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இசையும் நடனமும் அங்கம் வகித்தன. ‘மீடியாகார்ப்’ பாடகர் குணசேகரன் தமது பாடல்களால் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

‘வைஸ்ஓக்ஸ்’ அனைத்துலகப் பள்ளி மாணவர்கள், குடியிருப்பாளர்கள், மேரிமவுண்ட் - தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் நடன ஆர்வலர் குழுவினர் ஆகியோர் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய பாரம்பரிய உடைகளை அணிந்து அவர்கள் காட்சிப்படுத்தினர். 

வண்ணமயமான இந்த அணிவகுப்பு, பண்டிகையின் அழகிற்கு மெருகூட்டும் பல்வேறு பாணிகளையும் பாரம்பரியங்களையும் எடுத்துக்காட்டியது.

அதிர்ஷ்டக் குலுக்கல் அங்கம் நிகழ்ச்சிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டியது.

வாழ்க்கைக்கு உண்மையான பயன்தரும் உறவுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக இக்கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் தலைவர் சந்திரமோகன் மருதன் தெரிவித்தார்.

“குடும்பங்கள் சற்று நிதானம் அடைந்து, மீண்டும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்பதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. பெரியவர்களைப் போற்றவும், அன்புக்குரியவர்களுடன் நீங்காத நினைவுகளை உருவாக்கவும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நல்வாய்ப்பாக அமைகின்றன,”  என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்