கொளம் ஆயர் குடும்பங்களுக்கு முன்கூட்டியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

2 mins read
d0fbcfe1-c1bd-45b4-a1fb-929484c3aba3
ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் ஆறாவது கிறிஸ்துமஸ் சமூக நிகழ்ச்சி. - படம்: ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்
multi-img1 of 2

கொளம் ஆயர் பகுதியில் வசிக்கும் 77 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டது.

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் (ஜெசியூ) (சிங்கப்பூர் வளாகம்) மாணவர்களும் பணியாளர்களும் கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்தா குடியிருப்பாளர் கட்டமைப்புடன் இணைந்து நடத்திய பல்கலைக்கழகத்தின் ஆறாவது கிறிஸ்துமஸ் சமூக நிகழ்ச்சி, நவம்பர் 25ஆம் தேதி நடந்தேறியது.

ஜெசியூவின் சிம்ஸ் டிரைவ் வளாகத்திற்கு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொண்டூழியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒன்றுகூடினர்.

நிகழ்ச்சியில் உதவிசெய்ய கலந்துகொண்ட ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மாணவர்கள்.
நிகழ்ச்சியில் உதவிசெய்ய கலந்துகொண்ட ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மாணவர்கள். - படம்: ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்

அன்றாடப் பயன்பாட்டிற்கு அத்தியாவசியமான வீட்டுப் பொருள்களை அன்புடன் விநியோகித்ததுடன், குடியிருப்பாளர்களுடன் மனம்விட்டுப் பேசியும் பண்டிகையின் மகிழ்ச்சியான உணர்வைப் பகிர்ந்துகொண்டும் மாலை நேரத்தை அவர்கள் செலவிட்டனர்.

கொளம் ஆயர் குடியிருப்பாளர்களுடன் மனம்விட்டுப் பேசி. பண்டிகையின் மகிழ்ச்சியான உணர்வைப் பகிர்ந்துகொண்ட தொண்டூழியர்கள்.
கொளம் ஆயர் குடியிருப்பாளர்களுடன் மனம்விட்டுப் பேசி. பண்டிகையின் மகிழ்ச்சியான உணர்வைப் பகிர்ந்துகொண்ட தொண்டூழியர்கள். - படம்: ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்

அக்டோபர் முதல், ஜெசியூ தொண்டூழியர்கள் நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள பொருள்களான ரைஸ் குக்கர், மின்விசிறிகள், அடுப்புகள் (ovens), மளிகைப் பொருள்கள் வாங்க பயன்படுத்தும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

- படம்: ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்

பல ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இந்த நிகழ்ச்சி, பல்கலைக்கழக சமூகத்திற்கு மிகவும் அர்த்தமுள்ளதானது என்று ஜெசியூ சிங்கப்பூர் வளாகத்தின் செயல் தலைவரான இணைப் பேராசிரியர் கே. திருமாறன் கூறினார்.

“கல்வி, சேவை, கருணையின் மூலம் நாங்கள் சமூகத்திற்குத் திருப்பித் தர நினைக்கிறோம். இந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி, மகிழ்ச்சியைப் பரப்புவதற்கும் நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களுக்கு நாங்கள் அக்கறை காட்டுகிறோம் என்பதைக் காட்டுவதற்கும் ஒரு வழியாக அமைகிறது.

“இதுபோன்ற முயற்சிகள் இரக்கம், சேவை, சமூகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எங்கள் மாணவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இவை அனைத்தும் ஒரு பல்கலைக்கழகமாக நாங்கள் நிலைநிறுத்தும் அடிப்படைப் பண்புநலன்கள்,” என்று அவர் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கு இந்நிகழ்ச்சி பண்டிகைக் காலத்தின் ஒரு வரவேற்கத்தக்க பகுதியாக மாறியுள்ளது. தம் மனைவி, பிள்ளைகளுடன் வசிக்கும் சையத் இப்ராஹிம் பக்கிரி மஸ்தான், 67, ஆண்டுதோறும் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

“வழங்கப்படும் பரிசுகள் எங்களைப் போன்ற குடும்பங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கின்றன. தொண்டூழியர்களைச் சந்தித்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசவும் எங்களுக்கு இங்கு வாய்ப்புக் கிடைக்கிறது. குறிப்பாகப் பண்டிகைக் காலத்தில், நாங்கள் நினைவில் கொள்ளப்பட்டு, எங்களுக்கு ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பரிசு பெற்றுகொண்ட கொளம் ஆயர் குடியிருப்பாளர் 67 வயது சையத் இப்ராஹிம் பக்கிரி மஸ்தான்
பரிசு பெற்றுகொண்ட கொளம் ஆயர் குடியிருப்பாளர் 67 வயது சையத் இப்ராஹிம் பக்கிரி மஸ்தான் - படம்: ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்

2020 முதல், ஜெசியூ சிங்கப்பூரும் கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்தா குடியிருப்பாளர் கட்டமைப்பும் பல்வேறு சமூகத் திட்டங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தப் பங்காளித்துவம், கொளம் ஆயர் பகுதியில் இணைப்பு, ஆதரவின் நிலையான பாரம்பரியத்தை உறுதியுடன் உருவாக்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்