தாதிமையில் நிறைவளிக்கும் முனைவர் பட்டக்கல்வி

நடைமுறை சார்ந்த கற்றல்

தாதிமையில் நிறைவளிக்கும் முனைவர் பட்டக்கல்வி

படம்: துரைசாமி அருண்பாலாஜி

29 Nov 2026 - 6:00 am

2 mins read

தாதிமைத் துறையில் ஏறத்தாழ 15 ஆண்டுகள் அனுபவமிக்க திருவாட்டி ஹரிணி ராஜசேகர், 36, வேலையுடன் படிப்பையும் மேற்கொண்டு தம்மைப் படிப்படியாக முன்னேற்றி வருகிறார்.

பட்டயத்தோடு வேலைசெய்யத் தொடங்கிய இவர், தற்போது தாதிமைப் பயிற்சிக்கான முனைவர் பட்டப்படிப்பைச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்கிறார்.

என்யுஎஸ் யோங் லூ லிங் மருத்துவப்பள்ளியில் அங்கம் வகிக்கும் எலிஸ் லீ தாதிமை நிலையத்தில் திருவாட்டி ஹரிணி, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகப் பயின்று வருகிறார்.

2025 ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட அந்தப் படிப்பு, பகுதிநேர ஈராண்டுக் கல்வி. பினாங்கில் பிறந்து வளர்ந்த இவர், மலேசியாவில் பட்டயப்படிப்பை முடித்த பின்னர் 2016ல் ஆஸ்திரோலியாவிலுள்ள் கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் தமது இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

தகுதிநிலையில் உயரவேண்டும் என்ற பேரார்வம், கல்விப் பயணத்தைத் தொடரும் வேட்கையை இவருள் விதைத்தது.

2018ல் பெற்ற ஒரு கல்வி விருதுக்குப் பிறகு நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியில் நிபுணத்துவ பட்டயப்படிப்பை இவர் மேற்கொண்டார். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் சுகாதாரச் சேவை நிர்வாகம் பயின்ற இவர், தற்போது சிங்கப்பூரிலேயே ‘டின்பி’ எனப்படும் தாதிமை நடைமுறைசார் முனைவர் பட்டக்கல்வியைப் பயில்கிறார்.

இந்த அளவுக்குக் கற்றுத் தேர்ந்த திருவாட்டி ஹரிணி, தாதிமைத் துறையில் பணியாற்றுவேன் எனத் தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார்.

“மக்களோடு பழகுவது, நோயாளிகளோடு பேசுவது, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முனைவது போன்ற பண்புகள் என்னிடத்தில் உள்ளன என்பதைப் போகப் போக அறிந்துகொண்டேன்,” என்றார் இவர். 

உணர்வோடு பணியாற்றும் எண்ணப்போக்கு தம்மைப் பின்தொடர்ந்துவந்த சம்பவங்கள் சிலவற்றைத் திருவாட்டி ஹரிணி நினைவுகூர்ந்தார். “மாரடைப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்திருந்தேன். அத்தகையோரைத் தொடர்ந்து கண்காணித்துப் பராமரிப்பேன். அவர்கள் மெல்லத் தேறி வந்து குணமாவதைக் காணும்போது என் மனம் குளிரும்,” என்கிறார் இவர். அனுபவம்வழி கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருந்தாலும் ஏட்டுக்கல்வியும் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்ததாகத் திருவாட்டி ஹரிணி குறிப்பிட்டார். ‘பிஎச்டி’ எனப்படும் முனைவர் பட்டப்படிப்புக்குப் பதிலாக இந்த ‘டிஎன்பி’ படிக்க முடிவெடுத்தது குறித்தும் அவர் விளக்கினார்.

“படிப்பும் அனுபவமும் ஒன்றையொன்று ஆதரிப்பதுடன் வலிமை தருகின்றன,” என்கிறார் இவர். ஆய்வுமுறைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதில் தாம் மேற்கொள்ளும் கல்விமுறை கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் மேலோங்கிவரும் உலகில், கற்றவற்றை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தும் தேவைக்குப் பாடத்திட்டம் ஈடுகொடுப்பதாவும் இவர் குறிப்பிட்டார்.

காலையில் நேரத்துடன் எழுந்து, இரவில் நேரத்துடன் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இந்த மாது, சமைப்பதிலும் உடற்பயிற்சிக்கூடத்தில் வேர்த்து விறுவிறுப்பதிலும் இன்பம் காண்கிறார். இவரது கனவுகளுக்குக் கணவரும் மாமியாரும்  பெருந்துணையாக இருந்து தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். 

இத்தகைய மேற்படிப்பை மேற்கொள்வதற்குமுன், தற்போதுள்ள தெரிவுகள், நேரம், குடும்பப் பொறுப்புகள் போன்றவற்றை நுணுகி ஆராய்ந்து முடிவெடுக்கும்படி திருவாட்டி ஹரிணி பரிந்துரைக்கிறார்.

“என்னைப் பொறுத்தவரையில், அன்றாடம் வீட்டுக்கும் வேலைக்கும் இடையே செலவாகும் இரண்டு மணி நேரத்தைத் திட்டமிடுவதற்கும் வாசிப்பதற்கும் பயன்படுத்துவேன். அதே போல, உங்களது நேரமும் விரயமாகாமல் இருக்க நீங்களே சின்னஞ்சிறு வரையறைகளை வகுத்துக்கொள்ளுங்கள்,” என்றும் இவர் சொல்கிறார்.  

குறிப்புச் சொற்கள்