பெரியாரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல இலக்கு

தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழா

பெரியாரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல இலக்கு

1 of 3
படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்
படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்
படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்

02 Oct 2026 - 5:00 am

3 mins read

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் நடத்திய தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழா செப்டம்பர் 18ஆம் தேதி தேசிய நூலகத்தின் த பாட் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை ஆற்றிய பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் பூபாலன், பெரியாரின் வருகைக்குப் பின்னர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பகுத்தறிவு, சமூகச் சிந்தனைகளின் வளர்ச்சியையும் எடுத்துரைத்தார்.

பெரியார் விழா என்பது அவரை நினைவுகூர்வதுடன் நின்றுவிடாமல் அவரது சிந்தனைகளால் விளைந்த பயன்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றார்.

அன்பு, அறிவு, உயர்வு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விழாவில் புதுமைத்தேனீ மா.அன்பழகன் எழுதிய ‘செம்பியன் திருமேனி’ நூல் ஆய்வு இடம்பெற்றது. கவிஞரும் எழுத்தாளருமான திருவாட்டி சந்திரசேகரன் மோகனப்பிரியா நூலை ஆய்வுசெய்து பேசினார்.

பத்தாம் நூற்றாண்டைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நாவல் வரலாற்றுத் தகவல்களையும் புனைவையும் சிறப்பாக இணைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அக்காலத்து ஊர்கள், ஆறுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், இசைக்கருவிகள், விழாக்கள், வாழ்க்கைமுறை உள்ளிட்டவற்றை நூலாசிரியர் ஆராய்ந்து நாவலில் பயன்படுத்தியிருப்பது அதன் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாகக் கூறினார்.

வரலாற்றுப் பின்னணியுடன் கற்பனைக் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் இணைத்து வாசகர்களைப் பத்தாம் நூற்றாண்டின் சூழலுக்குள் அழைத்துச் செல்லும் படைப்பாக இந்நாவல் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறப்புரையாற்றிய முனைவர் சுப.திண்ணப்பன், பெரியாருடன் தமக்கிருந்த தொடர்பையும் பெரியாரின் சிந்தனைகள் தமது சிந்தனை வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவுகூர்ந்தார்.

திருவாரூரில் படித்த காலத்திலேயே பெரியாரின் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சிந்தித்து ஆராய வேண்டும் என்ற பெரியாரின் அணுகுமுறை தன்னை ஈர்த்ததாகவும் அவர் கூறினார்.

பெரியார், சமூகத்தில் சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு, மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்க பாடுபட்டதாகவும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்திலும் அவரது வருகையும் சிந்தனைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

2015ல் தாமும் திரு பூபாலனும் இணைந்து தொகுத்து வெளியிட்ட ‘சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார்’ என்ற நூல் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் பெரியாரின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்துகொள்ள இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாக இருக்கும் என்றும் பெரியாரின் காலத்துக்கு முன்பிருந்த சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலையும் அவரது வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் கவிதைகளின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என்றும் முனைவர் திண்ணப்பன் கூறினார்.

சிங்கப்பூருக்குப் பெரியாரின் வருகையையும் அதன் தாக்கத்தையும் பதிவுசெய்யும் இந்நூலை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனைகள் வரலாற்றில் மட்டும் நிற்காமல் இன்றைய தலைமுறையின் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் பயன்பட வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளும் சுயமரியாதைச் சிந்தனைகளும் இன்றும் பொருத்தமானவை என்று குறிப்பிட்டார்.

மலாயாவுக்கு பெரியார் மேற்கொண்ட பயணங்களையும் அங்கு தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தமிழர்களிடையே அவர் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வையும் நினைவுகூர்ந்த அவர், எதையும் சிந்தித்து, ஆராய்ந்து, காரணத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதைப் பெரியார் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

பிறப்பு, சமயம், குடும்பப் பின்னணி போன்ற வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொருவரையும் மனிதராகவும் சமமாகவும் மதிக்க வேண்டியதையும் கல்வி, சமத்துவம், சுயமரியாதை, மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பெரியார் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் மனிதரின் பகுத்தறிவும் சிந்திக்கும் திறனும் அவசியம் என்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை அறிவுடனும் பகுத்தறிவுடனும் கையாள வேண்டும் என்றும் திரு தினகரன் குறிப்பிட்டார்.

பெரியாரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதே அவரைக் கொண்டாடுவதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

செய்தி: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றச் செயலாளர் தமிழ்ச்செல்வி
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்