ஹில்வியூ இந்திய நற்பணிச் செயற்குழு, இவ்வாண்டு தீபாவளியை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது.
800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பல இன, சமய மக்கள் இந்திய உடை அணிந்து பங்கேற்றனர்.
அறுசுவை உணவு நிறைந்த வாழையிலை விருந்து வந்திருந்தோர்க்கு பரிமாறப்பட்டது. கோழியுடன் பாயாசம், ரசம், மோர் எனச் சுவையான உணவுப் பண்டங்களை விருந்தினர்கள் ரசித்து உண்டனர்.
அக்டோபர் 25ல் நடைபெற்ற இந்த விழாவுக்காகப் பெரிய வாழையிலைகள், நிகழ்ச்சிக்கு இரண்டு நாளுக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன.
ஒரே கோம்பாக் குடும்பம் என்ற அடையாளத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் கையால் சாப்பிட்டு, இந்திய இசைக்கு ஆட்டமாடியும் மகிழ்ந்தனர்.
பலர் மனமுவந்து வேறுபாடுகளின்றிக் கொண்டாடுவதைக் கண்ட ஏற்பாட்டாளர்கள் அகமகிழ்ந்ததாக இந்திய நற்பணிச் செயற்குழுவின் சார்பில் பிரமிளா கிலிட்டஸ், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
மேடை நிகழச்சி அங்கத்தில் மழலையர் பிள்ளைகள் முதலியோர் பாரம்பரிய, ஹிப் ஹாப் உள்ளிட்ட நடனங்களைப் படைத்துக் காட்டினர்.
இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட தீபவாளி ஒளியூட்டில் கலாசார, சமூக, இளையர் அமைச்சு, வர்த்தக, தொழில்துறை அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒளியூட்டு உள்ளிட்ட தீபாவளிக் கொண்டாட்டங்கள், வட்டாரவாசிகள் ஆண்டுதோறும் எதிர்பார்த்து வரவேற்பவையாக அமைந்துள்ளன,” என்று புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருவாட்டி லோ கூறினார்.
நிகழ்ச்சியில் இந்தியர் அல்லாதோர் பலர் திரண்டிருந்ததைக் கண்டு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன் தெரிவித்தார்.
“ஏற்பாட்டாளர்களே கைப்பட உணவு பரிமாறியதைக் காணும்போதும் மிகவும் நிறைவாக இருந்தது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிகாக ஏற்பாட்டாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்,” என்று திரு ரவீந்திரன் கூறினார்.

