மாதவிடாய் நிற்கும் காலப் பராமரிப்பு

ஆதரவான வேலையிடச் சூழலை உருவாக்க புதிய வழிகாட்டி நூல்

மாதவிடாய் நிற்கும் காலப் பராமரிப்பு

1 of 2
படம்: அடோபி ஸ்டோக்
படம்: பல துறைசார் மாதவிடாய் நிற்கும் காலச் செயற்குழு

23 Sep 2026 - 5:33 am

3 mins read

வேலைக்குச் செல்லும் மகளிர் எதிர்கொள்ளும் மாதவிடாய் நிற்கும் காலச் (மெனோபாஸ்) சவால்கள் குறித்துப் பணியிடங்களில் அச்சமின்றிப் பேசுவதற்கும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் உதவும் புதிய வழிகாட்டி நூல் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது.

‘மாதவிடாய் நிற்கும் காலப் பராமரிப்பு வழிகாட்டி: ஆதரவான, அனைவரையும் உள்ளடக்கிய பணியிடத்தை உருவாக்குதல்’ (Menopause Care Playbook: Creating A Supportive & Inclusive Workplace) என்ற 44 பக்கங்களைக் கொண்ட இந்த இலவச வழிகாட்டியை நிறுவனங்களும் ஊழியர்களும் str.sg/gSi8 என்ற இணையப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பொதுவாகச் சிங்கப்பூரில் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பணி வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே மாதவிடாய் நிற்கிறது. மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய பருவத்தில் (Perimenopause) மூட்டு வலி, தூக்கமின்மை, உடல் - மனச்சோர்வு போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.

பணிக்குழு அமைப்பு

தேசிய பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் ‘பியா-ஈகோ ஆசிய மையமும்’ (ACRLE) ‘ஹேவீனஸ் இன்டக்ரேட்டட் ஹெல்த்சயின்ஸ்’ (HeyVenus) அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் அந்த வழிகாட்டி நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்விரு அமைப்புகளும் இணைந்து, பல துறைசார் மாதவிடாய் நிற்கும் காலச் செயற்குழு (Cross-Sector Menopause Taskforce) ஒன்றை உருவாக்கியுள்ளன. அரசு, தனியார் சுகாதார அமைப்புகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு லாபநோக்கற்ற குழுவாக அது செயல்படுகிறது.

சிங்கப்பூரிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் மாதவிடாய் நிற்பது குறித்த விழிப்புணர்வையும், அது தொடர்பான புரிதலையும் அதிகரிப்பதை அந்தப் பணிக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

70 விழுக்காட்டினரின் பணித்திறன் பாதிப்பு

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, வேலைக்குச் செல்லும் 1,741 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிங்கப்பூரில் 45 வயதிற்கு மேற்பட்ட பத்தில் ஏழு பெண்கள், கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் மாதவிடாய் நிற்கும் கால அறிகுறிகளால் தங்களது பணித்திறன் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் பெண்கள் இந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்துத் தெரிந்துகொள்ள இணையத்தளம், குடும்பத்தினர், மருத்துவர்களை அதிகம் நாடுகின்றனர். பணியிடங்களில் இதுகுறித்துப் பேசுவது மிகவும் குறைவாக, 20.8 விழுக்காடாகவே உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்தது.

மருத்துவக் காப்புறுதி, நீக்குப்போக்கான பணிச்சூழல், விழிப்புணர்வுக் கலந்தாய்வுகள் ஆகியவற்றைத் தங்களது நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உதவும் வகையில் எளிமையான நடைமுறைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மூன்று வெவ்வேறு நிறுவனங்களின் அனுபவங்களும் அதில் விவரிக்கப்பட்டுள்ளன.

பணியிடப் பாதுகாப்பிற்கான புதிய அனைத்துலகத் தரநிலை

அனைத்துலகத் தரநிலை அமைப்பும் (ISO) ஊழியர்களின் உடல்நலம், பாதுகாப்பை உறுதிசெய்ய ‘ஐஎஸ்ஓ 45010’ என்ற புதிய உலகளாவிய வழிகாட்டுதலை இலவசமாக வெளியிட்டுள்ளது.

உலகளவில் நிறுவனங்கள் மாதவிடாய் நிற்பது தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை அது வரையறுக்கிறது.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் தகுந்த மருத்துவச் சிகிச்சை பெற்ற பெண்களில் 79 விழுக்காட்டினர் தங்களின் உடல், மனநலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

எனினும், 32 விழுக்காட்டுப் பெண்கள் உள்ளூர் மருத்துவ ஆதரவு பற்றி அறியாமலும், 49 விழுக்காட்டினர் அதற்கான சிகிச்சை முறைகளின் செயல்திறன் குறித்த தெளிவில்லாமலும் உள்ளனர்.

நிறுவன ஆதரவு, சமூகப் பொருளியல் முக்கியத்துவம்

பணியிடங்களில் பெண் ஊழியர்கள் தங்களின் உடல்நலச் சவால்களை வெளிப்படையாகக் கூறி நீக்குப்போக்கான பணி நேரத்தைப் பெறும்போது, அவர்களின் பணித்திறனும் உற்பத்தித்திறனும் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.

மாதவிடாய் நிற்பது என்பது தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினை மட்டுமன்று; அது ஒரு சமூக, பொருளியல் சார்ந்த விஷயமாகும். பெண்களின் பணித்திறன் குறையாமல் இருக்கவும், அனுபவமிக்க பெண் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் நிறுவனங்கள் ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வழிகாட்டிக் கையேடு வலியுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிங்கா60பெண்கள்மாதவிடாய்வேலையிடம்பணிநூல்ஆதரவு