வட இந்தியர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை இவ்வாண்டு முதன்முறையாக இங்குள்ள வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களில் இடம்பெற்றன.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு கடந்த மார்ச் 23ஆம் தேதி செம்பவாங், கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையங்களில் அக்கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.
வண்ணக் கொண்டாட்டத்தில் செம்பவாங்கில் 1,700 பேரும் கிராஞ்சியில் 2,800 பேரும் பங்கேற்றுக் களித்தனர்.
வெள்ளைச் சட்டைகளை அணிந்து வந்த அவர்கள், வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் தெளித்து விளையாடினர். தண்ணீர் பலூன் விளையாட்டுகளிலும் அவர்கள் பங்கேற்று களிப்புற்றனர்.
இரு நிலையங்களிலும் 1,500 இலவச பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் ‘டியூக்-என்யுஎஸ்’ மருத்துவப் பள்ளி வைத்திருந்த சாவடி, பாதுகாப்பாகப் பணியாற்றுவது குறித்த தகவலைக் கலை நயமான புதிர்விளையாட்டு மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணர்த்தியது.
“டியூக்-என்யுஎஸ்சிலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் வழங்கினர். தேவைப்பட்டால் மலிவான விலையில் சாட்டா காம்ஹெல்த் மூலம் மருத்துவ உதவியும் பெறலாம் எனக் கூறினர்,” என்றார் கட்டுமானத் துறையில் பணியாற்றும் பொன்னையா பாலகிருஷ்ணன், 42.
‘ஏஜிடபுள்யுஓ’ எனும் வெளிநாட்டு ஊழியர் உதவிக்குழு செம்பவாங்கில் இலவச முடிதிருத்தச் சேவையும் வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
“சில மணி நேரம் இந்தியாவுக்கே திரும்பிச் சென்றதுபோல் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் கப்பல்துறையில் பணியாற்றும் மனோகரன் விக்னேஷ், 28.
முதன்முறையாக ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிய வேல்சாமி செந்தில்ராகவன், 44, ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்.
அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசுகள் பெற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ந்தனர்.