கலையும் தொழில்நுட்பமும் கைகோக்கும் புதிய முயற்சி

2 mins read
6ff54b28-112e-4890-b1ee-0b16ffe2ee60
‘படிமை’ கலை, தொழில்நுட்பக் கூடத்தின் நிறுவனர் விக்னேஷ் சுந்தரேசன் (இடம்), புகழ்பெற்ற சமகாலக் கலைஞர் ஒலாஃபர் எலியாசன் படைக்கும் ‘உங்கள் பார்வையில்’ கலைக் கண்காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு புதிய பண்பாட்டு முயற்சியாக, கலையும் தொழில்நுட்பமும் ஒன்றிணையும் ‘படிமை’ கூடம் நவம்பர் 19ஆம் தேதி தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் வளாகத்தில் அறிமுகம் கண்டுள்ளது.

கலை, தொழில்நுட்பம் ஒன்றிணைந்து திடமாக ஒன்றாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதால் கூடத்துக்குப் ‘படிமை’ என்று பெயர் சூட்டியதாகத் தெரிவித்தார் கூடத்தின் நிறுவனர் விக்னேஷ் சுந்தரேசன், 38.

‘மெட்டகோவன்’ என்ற இணையப் புனைப்பெயரில் தரவுத்தொடர் (blockchain) வல்லுநராகவும் திகழும் விக்னேஷ், அதன்பின் அடங்கியுள்ள கருத்துப் படிவத்தை பயன்படுத்த நினைத்தார்.

“சிறிதளவு மண்ணைத் தாங்கியிருக்கும் ஒரு டெரேரியம் (terrarium) காட்சிபோல கலை நிலைத்திருக்க அதைப் பாதுகாக்க விரும்பினேன்,” என்றார் விக்னேஷ்.

பாதுகாப்பாக இணைக்கப்பட்ட தரவுகளைப் பதிவுசெய்யும் மின்னிலக்க ஆவணம் தரவுத்தொடர் ஆகும். இந்த ஆவணங்கள் ஒரே இடத்தில் சேமிக்கப்படாமல் பல முனைகளில் விநியோகிக்கப்படுகின்றன. இதனால், அதைச் சேதப்படுத்துவது மிகவும் கடினம் என்று விளக்கினார் விக்னேஷ்.

“தொழில்நுட்பத்தைக் கட்டுப்பாட்டுக்காக மட்டுமல்லாமல், கலைஞர்கள், சமூகங்கள் தங்கள் படைப்புகளை விருப்பப்படி பாதுகாக்கவும் பயன்படுத்தலாம்,” என்றார்.

கூடத்தின் முதல் கண்காட்சியாக உலகப் புகழ்பெற்ற சமகாலக் கலைஞர் ஒலாஃபர் எலியாசன் உருவாக்கிய ‘உங்கள் பார்வையில்’ என்ற கலைப்படைப்பு மக்களை வரவேற்கும்.

ஏழு மெய்நிகர் சூழல்களை ஆராயும் செய்தியாளர்கள்.
ஏழு மெய்நிகர் சூழல்களை ஆராயும் செய்தியாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பங்கேற்பாளர்கள் ஒளி, வடிவவியலை ஆராயும் ஏழு மெய்நிகர்ச் சூழல்கள் வழியாக நகர்ந்து, தங்கள் அனுபவத்தைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளை உருவாக்க முடியும்.

“மெய்நிகர்க் கருவிகள் பெரும்பாலாக அச்சமூட்டும் சூழல்களை உருவகப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன,” என்றார் விக்னேஷ்.

இந்த மெய்நிகர்ச் சூழல்களை அனுபவிக்கும் பங்கேற்பாளர்களின் மின்னிலக்கத் தடங்கள் தரவுத்தொடர்களாகப் பாதுகாக்கப்படும்.
இந்த மெய்நிகர்ச் சூழல்களை அனுபவிக்கும் பங்கேற்பாளர்களின் மின்னிலக்கத் தடங்கள் தரவுத்தொடர்களாகப் பாதுகாக்கப்படும். - படம்: ‘படிமை’ கலை, தொழில்நுட்பக் கூடம்

ஆனால், மென்மையைத் தூண்டும் கலையை உருவாக்குவதன் மூலம் அந்தக் கருத்தை மாற்ற ஓலாஃபர் விரும்பியதாக விக்னேஷ் தெரிவித்தார்.

இந்த மெய்நிகர்ச் சூழல்களை அனுபவிக்கும் பங்கேற்பாளர்களின் மின்னிலக்கத் தடங்கள் தரவுத்தொடர்களாகப் பாதுகாக்கப்படும்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஒலாஃபரைச் சந்தித்தார் விக்னேஷ்.

“அவர் தம் பார்வையாளர்களை மையமாகக் கொண்டு கலையை உருவாக்குகிறார். அது எனக்கு மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருந்தது,” என்று விக்னேஷ் சொன்னார்.

அத்துடன், மெய்நிகர் பயன்பாட்டில் கற்பனைக்கு வரம்பு இல்லை.

“நமது கலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நமக்கு பல யோசைனைகள் இருக்கலாம். மேலும், மெய்நிகர் தரவுகளைப் பாதுகாப்பது எளிது,” என்றார் விக்னேஷ்.

நாளடைவில் தமிழ்ப் பண்பாடு, மொழி, மரபு சார்ந்த கலை மற்றும் தொழில்நுட்ப ஒன்றிணைப்பில் காலெடுத்து வைக்க அவர் விரும்புகிறார்.

“கலையை ரசிக்க கலையார்வம் அவசியம் இல்லை. நாம் ஒரு பாடல் கேட்டு ரசிப்பது போல நம்மில் படிந்திருக்கும் ரசனைத்தன்மை இருந்தால் போதும்,” என்று அவர் கூறினார்.

ஒலாஃபர் எலியாசனின் ‘உங்கள் பார்வையில்’ கலைக் கண்காட்சி நவம்பர் 20ஆம் தேதி முதல் அடுத்த மார்ச் மாதம் இறுதிவரை ‘படிமை’ கலை, தொழில்நுட்பக் கூடத்தில் காட்சிப்படுத்தப்படும். நுழைவு அனுமதி இலவசம்.

மேல்விவரங்களுக்கு https://padimai.net/ எனும் இணையத்தளத்தை அல்லது https://www.instagram.com/padimai_art_tech எனும் சமூக ஊடகப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்