பூமலையின் புதிய பசுமைப் பயணம்

பூமலையின் புதிய பசுமைப் பயணம்

2 mins read
7ffa0482-e209-43f7-83e6-bbfd9abbdd46
தேசிய பூங்காக் கழகத்தின் புதிய இயற்கைத் தடம், மக்களுக்கு மன நிம்மதி தரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. - படம்: காமாட்சி சந்திரசேகர்
multi-img1 of 2

பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு மாற்றான ஒரு சூழலை அமைத்துக் கொடுத்து, மக்களுக்கு மன அமைதியை வழங்கும் வண்ணம், சிங்கப்பூர் பூமலையில் இயற்கைத் தடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

தேசிய பூங்காக் கழகத்தால் ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்ட இந்தத் தடம், மக்கள் தங்கள் வசதிக்கேற்ப இயற்கையான சூழலில் நேரம் செலவிட்டு மனத்தளவில் அமைதி அடைய கைகொடுக்கிறது.

பசுமையான இடங்கள் எவ்வாறு ஒருவரின் உடல், மன நலத்திற்கு ஆதரவளிக்கும் என்பதை ஆராயும் ஆரோக்கியத்துக்கு பூங்காக்கள் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய பூங்காக் கழகம் இந்த இயற்கை நடை பாதையை உருவாக்கியுள்ளது.

சராக்கா சிற்றோடை என்ற இந்தத் தடம், ஆசியாவில் திறக்கப்படும் முதல் அனுபவபூர்வமான இயற்கைத் தடமாகத் திகழ்கிறது. 

தடத்தில் பொருத்தப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள், பூமலைக்கு வருபவர்களை ஆழமாக சுவாசிக்கவும் இயற்கை ஒலிகளை ரசிக்கவும் மரங்களின் வழியே வரும் ஒளியையும் தாவரங்களின் வடிவங்களையும் கவனித்து மனத்தை அமைதிப்படுத்தத் தூண்டுகின்றன. 

தடத்தில் கிட்டத்தட்ட 12 நுணுக்கப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. பலவித மரங்கள், நீரோட்டம், பட்டாம்பூச்சி போன்ற சிறு உயிரினங்கள் என இயற்கையின் அழகில் மூழ்கலாம். 

இயற்கையோடு ஒன்றிணைந்திருக்கும் அனுபவங்களை ஊக்குவிக்கும் அனைத்துலக அமைப்பான இயற்கை, வன சிகிச்சை சங்கத்தின் (ANFT) அங்கீகாரத்தைப் பெற்ற ஆசியாவின் முதல் பாதை இது.

இந்தத் தடம், உலகில் அங்கீகரிக்கப்பட்ட 28 தடங்களில் ஒன்றாகும். 

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பெரும்பாலான நடைபாதைகளைப் போலல்லாமல், இந்தப் பாதை குறைந்த தூரத்தைக் கொண்டிருக்கிறது. நடப்பவருக்கு சுற்றியுள்ள இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகமாக்க இது ஊக்குவிக்கிறது.

150 மீட்டர் நீளமுள்ள இத்தடம், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களும் எளிதாக அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்களிடையே மனநலப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரர்களிடம் மனநலப் பிரச்சினை 15.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மன அமைதியைத் தேடி இயற்கையோடு இணைய இத்தடம் உதவுகிறது.

இயற்கையுடன் இணைவது உடலளவிலும் மனத்தளவிலும் பலவகை நன்மைகளை வழங்கும் என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில், சமூக நலனை மேம்படுத்த தேசிய பூங்காக் கழகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இத்தடம் திகழ்கிறது.

குறிப்புச் சொற்கள்