இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய விளையாட்டு

2 mins read
f4260f97-d479-40a1-90f1-de9892587552
‘மேயர்’ஸ் ஹார்மனி ஃபுட்சால்’ சவால் @ சவுத் ஈஸ்ட் 2024’  நிகழ்ச்சியில் 21 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள். - படம்: தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம்

‘மேயர்’ஸ் ஹார்மனி ஃபுட்சால்’ சவால் @ சவுத் ஈஸ்ட் 2024’ விளையாட்டுப் போட்டி, இரண்டாவது முறையாக சஃப்ரா தெம்பனிஸ் வளாகத்தில் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது.

இன நல்லிணக்கக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளில் 100க்கு மேற்பட்ட இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் உள்ளூர் சமூக அமைப்புகளின், பள்ளிகளின் சார்பாகப் போட்டியிட்டனர். 

தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், ஒன்பீப்பள்.எஸ்ஜி என்ற அமைப்புடன் இந்த நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்தது. விளையாட்டின் மூலம் சிங்கப்பூர் இளையர்களிடம் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் தென்கிழக்கு மாவட்ட மேயர் ஃபஹ்மி அலிமான் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பங்கெடுத்த இளையர்களின் துடிப்பான ஆற்றலைப் பாரட்டிய அவர், “இளையர்களை ஒன்றிணைத்து, புரிந்துணர்வு, மரியாதை போன்ற பண்புகளை விளையாட்டு கற்றுத் தருகிறது. விளையாட்டு மூலம் எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஓர் எதிர்காலத்தை உருவாக்கலாம்,” என்றார். 

பங்கேற்பாளர்களிடையே போட்டி இருப்பினும், ஒருவருக்கொருவருடன் ஏற்படும் பிணைப்பு மிக வலுவானதாக அமைந்ததாகக் கூறினார் வெற்றியாளர் அணியைச் சேர்ந்த ஹாஜாம் தீன்.

“இந்த விளையாட்டுப் போட்டி ஒரு கற்றல் நிறைந்த அனுபவமாக இருந்தது. விளையாட்டில் போட்டித்தன்மை இருந்தாலும், நான் பல புதிய நண்பர்களைச் சந்தித்தேன். வெற்றி பெறுவது ஒருபுறமிருக்க, விளையாட்டு மூலம் நாம் எப்படி மற்றவர்களுடன் இணைகிறோம் என்பது முக்கியம்,” என்று அவர் சொன்னார்.

நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றியாளர் அணிக்கு கிண்ணங்களும் $800 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு $600 மற்றும் $400 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளும் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பங்கேற்பாளர்கள் தங்கள் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்துவதோடு, சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தையும் அவை பிரதிபலிப்பதாக தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்