தமிழ் பேசும் சீனச் சிறுவன்; தந்தையின் தனித்துவமான முயற்சி

தமிழ் பேசும் சீனச் சிறுவன்; தந்தையின் தனித்துவமான முயற்சி

3 mins read
இணையவாசிகளை ஈர்க்கும் சீனச் சிறுவனின் தமிழ்ப் பேச்சு
0ae27331-8b5f-4baf-ac76-825385534aac
மகன் டெடியுடன் காணொளிகள் உருவாக்கும் பெஞ்சமின். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பரபரப்பான பன்முகக் கலாசாரச் சூழலில், மொழிகள் தகவல் பரிமாற்றத்திற்கானவை மட்டுமல்ல; அவை வெவ்வேறு சமூகத்தினரை இணைக்கும் பாலங்கள் ஆகும்.

ஈசூன் வட்டாரத்தின் டி’ரூபினாஹ் உணவுக் கடையில் உணவு வாங்கச்செல்லும் சிலர் சீனச் சிறுவன் ஒருவன் மழலைக் குரலில் தமிழ் பேசி, பரோட்டா வாங்குவதைக் காணமுடியும். 

தமது மூன்று வயது மகன் டெடி லீ (Teddy Lee Zheng Xi) பிற இனத்தவருடன் தயக்கமின்றி, நம்பிக்கையோடு பழக வேண்டும் என்று விரும்பும் 34 வயது பெஞ்சமின் லீ (Benjamin Lee Chin Yang) இதற்குக் காரணம். 

சமூக ஊடகங்களில் புகழ்பெற்றுள்ள இந்தத் தந்தை-மகன் இணை, 2024ஆம் ஆண்டு தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

தந்தையாகத் தம் மகனுடன் நேரம் செலவிடுவதையும் பிள்ளை வளர்ப்பில் தாம் சந்திக்கும் சில சவால்களைப் பற்றியும் பெஞ்சமின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்.

தம் மகன் உணவுக் கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் பிற மொழிகளைச் செவிமடுத்து, அனைவரோடும் இணைந்து வளர வேண்டும் என்று விரும்பிய பெஞ்சமின், அவனுக்குத் தமிழ் மொழியை அறிமுகப்படுத்தினார். 

டி’ ரூபினாஹ் உணவுக்கடையில் தமிழில் பேசி உணவு வாங்கும் டெடி.
டி’ ரூபினாஹ் உணவுக்கடையில் தமிழில் பேசி உணவு வாங்கும் டெடி. - படம்: காமினி ஹஷ்வின்

“வணக்கம் அண்ணே”, “வணக்கம் அக்கா”, “இரண்டு பரோட்டா”, “சீனி வேண்டும்”, “கறி வேண்டும்”,“நன்றி” எனத் தடுமாறாமல் தமிழ்ச் சொற்களைப் பேசுகிறார் டெடி.

உணவகத்தில் உணவு வாங்குவதுடன் மனிதர்களோடு ஆழமான பிணைப்பை உருவாக்க வேண்டும் என டெடியின் தந்தை கருதுகிறார்.

“டெடி வளரும்போது வெவ்வேறு மொழிகளும் கலாசாரங்களும் அவனுக்கு அந்நியமாகத் தெரியக்கூடாது. அவை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அவன் புரிந்து கொள்ளவேண்டும்,” என்றார் பெஞ்சமின்.

இந்த முயற்சியின் பின்னணியில் பல சுவாரசியமான கதைகள் உள்ளன. 

இணையத்தில் மக்கள் பார்க்கும் முப்பது நொடிக் காணொளிகளுக்குப் பின்னால் பல மணி நேரப் பயிற்சியும் ஏராளமான நகைச்சுவையான தவறுகளும் (bloopers) நிறைந்திருக்கின்றன. 

கூகல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடனும், நண்பர்களின் ஆலோசனையுடனும் பெஞ்சமின் தன் மகனுடன் சேர்ந்து தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 

சிலநேரங்களில் தம்மை விடவும் டெடி சொற்களை மிகச் சரியாக உச்சரிப்பதாக அவர் சொன்னார்.

“டெடி எளிய தமிழ்ச் சொற்களைப் பிழை இல்லாமல் எளிதாகக் கற்றுக்கொள்வதைப் பார்ப்பது நெகிழ வைக்கிறது. சிறு வயதிலிருந்தே பல்வேறு பண்பாடுகள், மொழிகளால் சூழப்பட்டிருப்பதுதான் சிங்கப்பூரின் சிறப்பு என்பதை இது பிரதிபலிக்கிறது,” என்று கூறினார் டெடியின் 33 வயது தாய் மேக்டலீன் ஹேங்.

அடிக்கடி டெடி செல்லும் பரோட்டா கடையின் ஊழியரான 27 வயது  செல்வகுமாரி, சிறுவனின் தமிழ் ஆர்வத்தையும் அவனது மழலைத் தமிழையும் கண்டு முற்றிலும் வியந்தார்.

டி’ ரூபினாஹ் உணவுக்கடையில் குமாரி செல்வகுமாரியிடம் உணவு வாங்கியபின் மீதப் பணத்தை வாங்கும் டெடி.
டி’ ரூபினாஹ் உணவுக்கடையில் குமாரி செல்வகுமாரியிடம் உணவு வாங்கியபின் மீதப் பணத்தை வாங்கும் டெடி. - படம்: காமினி ஹஷ்வின்

“பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மலாய் அல்லது ஆங்கிலத்தில்தான் பேசுவர். ஆனால் சிறுவன் டெடி, ‘ரொம்ப நன்றி’, ‘எவ்வளவு விலை?’, ‘பரோட்டா வேண்டும்’ என மிக அழகாகத் தமிழ் பேசுவதாக அவர் கூறினார். 

“அவன் கடைக்கு வரும்போது இங்கு வேலை செய்யும் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியாக இருக்கும். எல்லார் பார்வையும் அவன் மீதுதான் இருக்கும்,” என்றார் செல்வகுமாரி.

சமூக ஊடகங்களில் டெடியின் காணொளிகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா எனப் பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளன. 

பல இனங்களையும் சேர்ந்த பெற்றோர் இந்த முயற்சிக்குத் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளை பெஞ்சமினிடம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த அழகான கற்றல் அனுபவம் டெடியின் எதிர்கால வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும் என்று பெஞ்சமின் முழுமையாக நம்புகிறார்.

“அவன் வளர்ந்து, தொடக்கப்பள்ளிக்குச் செல்லும்போது அனைத்து இன, சமய, கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுடன் எளிதாக நட்புறவு ஏற்படுத்திக்கொள்ளவும் அவர்களுடன் இயல்பாகப் பழகவும் இந்த அனுபவம் நிச்சயமாக அவனுக்கு உதவும்,” என்றார் அன்புத் தந்தை.

குறிப்புச் சொற்கள்