கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மதியம் பொழிந்த கனமழையைப் பொருட்படுத்தாது கிட்டத்தட்ட 100 வெளிநாட்டு ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
டிசம்பர் 18ஆம் தேதி அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ச்சியான கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டிசம்பர் 7ஆம் தேதி இல்லப் பணிப்பெண்களும் வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களுடன் ‘ஃபிரிஸ்பீ’ விளையாடினர்.
ஏறத்தாழ 10 ‘வெஸ்ட்லைட்’ தங்குவிடுதிகளிலிருந்து ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மழை காரணமாக இறுதிச்சுற்று ரத்து செய்யப்பட்டது. அதனால், புள்ளித் தரவரிசையின் அடிப்படையில் சிறப்பு தேர்ச்சிபெற்ற மூன்று அணிகளுக்குப் பரிசளிக்கப்பட்டது.
மழையை எதிர்பார்க்கவில்லை என்று கூறிய மனோ, 32, மழைத் தூறலுக்கு மத்தியில் விளையாடிய அனுபவம், வீட்டில் கிரிக்கெட் விளையாடியதை நினைவூட்டியது என்றார்.
“இன்று எனக்கு இது வெறும் விளையாட்டு மட்டுமன்று. மற்ற நாடுகளைச் சேர்ந்த புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது,” என்றார் அவர்.
முதலிடத்தைப் பிடித்த மனோவின் ‘தோ குவான் டைகர்ஸ்’ அணி, $1,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசு, வெற்றிப் பதக்கங்கள், கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது பரிசைத் தட்டிச் சென்றனர் ‘வெஸ்ட்லைட் ஊபி’ ஊழியர்களின் அணியான ‘ஊபி ரைனோஸ்’.
பொதுவாக, ஒரு கிரிக்கெட் அணியில் 11 விளையாட்டாளர்கள் உண்டு. ஆனால், இம்முறை ஓர் அணியில் எட்டுப் பேர் மட்டுமே இடம்பெற்றனர்.
சேகர் சத்யராஜ், 37, போன்ற மூத்த வெளிநாட்டு ஊழியர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.
“வாரம் முழுவதும் வேலை செய்து வாரயிறுதியில் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது புத்துணர்ச்சியூட்டும் ஓர் அனுபவம்,” என்றார் அவர்.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்காத ஏழு அணிகளுக்குப் பங்கேற்புக்காக $250 வழங்கப்பட்டது.
சிறந்த பந்தடிப்பாளர், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் ஒவ்வொருவருக்கும் தலா $200 அளிக்கப்பட்டது.
மழையில் விளையாடியது சுவாரஸ்யமாக இருப்பினும், மழை இல்லாவிட்டால் கண்டிப்பாக தங்களது அணி வெற்றி பெற்றிருக்கும் என்றார் முத்துராமலிங்கம் ராஜபூபதி, 30.
அவருடைய அணி ‘ஜாலான் துகாங்க் டைகர்ஸ்’ மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
“ஏமாற்றமாக இருந்தாலும், முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.

