செய்தியாளர் குரல்: துணைதேட உதவும் பழகுதளம்

செய்தியாளர் குரல்: துணைதேட உதவும் பழகுதளம்

1 of 2
படம்: சாவ்பாவ்
படம்: சாவ்பாவ்

10 Oct 2026 - 6:30 am

2 mins read

கவ்டெக் அமைப்பின் ‘ஃபர்ஸ்ட் டேட்’ (FirstDate) துணைதேடும் முன்னோடித் திட்டம், இளையர்களிடையே அதிகரித்துள்ள ‘பழகுதளச் செயலிச் சலிப்புக்கு’ (dating app swipe fatigue) அரசாங்கத்தின் புதிய தீர்வாகும்.

சிங்பாஸ் மூலம் பயனர் விவரங்களை உறுதிப்படுத்தி, அவர்களின் விருப்பங்களை அறிந்து, ஒவ்வொரு முறையும் ஒருவரை மட்டும் பரிந்துரைக்கும் கணிப்புநெறியை இத்தளம் கொண்டுள்ளது. 21 முதல் 35 வயதுடையோரை இலக்காகக் கொண்ட இதில், பயனர் தாங்கள் பணிபுரியும் அதே அமைப்பைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் இணைக்கப்படுவதைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

எனினும், இத்திட்டம் தொடக்கத்தில் பொதுச் சேவை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது, அரசாங்கம் தனிமனிதர்களின் துணைதேடும் முயற்சியில் தலையிடுவது தொடர்பான பழைய சமூகப் பாகுபாடுகளை நினைவூட்டுகிறது.

திருமணம், குடும்பம் போன்ற தனிப்பட்ட விவகாரங்களில் அரசாங்கத்தின் ஈடுபாடு சிங்கப்பூருக்குப் புதிதன்று. 1983 தேசிய தினப் பேரணியில், அதிகக் கல்வித்தகுதி பெற்ற பெண்கள் குறைவான குழந்தைகளைப் பெறுவதாக அப்போதைய பிரதமர் லீ குவான் யூ சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, 1984ல் ‘பட்டதாரித் தாயார் திட்டம்’ (Graduate Mothers’ Scheme) கொண்டுவரப்பட்டது. கல்வித்தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு சமூக பிரிவினரின் குடும்ப உருவாக்கத்தை மட்டும் அரசாங்கம் முதன்மைப்படுத்திய அத்திட்டம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

‘ஃபர்ஸ்ட் டேட்’ திட்டத்தைச் சோதிக்கும் முதற்கட்டப் பயனர்களாகவே பொதுச் சேவை ஊழியர்களைத் தேர்ந்தெடுத்ததாக கவ்டெக் குறிப்பிட்டாலும், அன்றைக்கு குறிப்பிட்ட ஒரு பிரிவினர்மீது காட்டப்பட்ட அதே சிறப்புக் கவனம், இன்று பொதுச் சேவை ஊழியர்கள்மீது காட்டப்படுகிறதோ என்ற ஐயத்தை இது எழுப்புகிறது.

தேசிய மின்னிலக்க அடையாளமான சிங்பாஸ் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது பொதுச் சேவை ஊழியர்களுக்காக மட்டுமென உருவாக்கப்படவில்லை.

தொடக்கம் முதலே அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் சமமாகச் சேவை வழங்கவே அது கொண்டுவரப்பட்டது.

அப்படியிருக்க, அரசாங்க நிதியில் அதே அரசாங்க உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் பழகுதளம், தொடக்கத்தில் பொதுச் சேவை ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதன் காரணம் என்ன?

நேரமின்மை, சுருங்கும் சமூக வட்டம் காரணமாக இன்று இளையர்கள் பலர் துணைதேடச் சிரமப்படுகின்றனர். கடந்த ஆண்டு நடந்த தமிழ் முரசின் இளையர் கலந்துரையாடலில் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் நேரடியாக எழுப்பப்பட்ட கேள்விகளிலும் இக்கவலைகள் வெளிப்பட்டன.

திருமணங்களை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கமென்றால், ஒருவரின் பணித்துறை இந்த வாய்ப்பைத் தீர்மானிக்கலாமா?

தனியார்துறை இளையர்களும் இதே ‘பழகுதளச் செயலிச் சலிப்பை’ எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கும் இத்தகைய அரசாங்க ஆதரவு கிடைக்க வேண்டுமல்லவா?

ஒருவேளை, ‘ஃபர்ஸ்ட் டேட்’ திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்த கலந்துரையாடல் இதிலிருந்தே தொடங்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
சிங்பாஸ்பொதுச்சேவைஅரசாங்கம்துணைலீ குவான் இயூஇளையர்திருமணம்